நான் செத்துட்டேன்னு துக்கம் கேட்டு வந்துட்டாங்க... நல்லவேளை மாலை வாங்கிட்டு வரலை!
சிரிக்கச் சிரிக்கப் பேசும் லியோனியைப் பற்றி சீரியஸான தகவல்கள் வலம் வர ஆரம்பித்து உள்ளன. திடீரென ஒரு செய்தி... லியோனி விபத்தில் சிக்கி மரணம் என்று. விசாரித்தால் அப்படி எதுவும் இல்லை. திண்டுக்கல் வீட்டில் அமைதியாக இருக்கிறார். இந்தச் செய்தியைக் கேட்டு சிரிக்கிறார். இன்னொரு பக்கம், செல்போனில் அவருக்குக் கொலை மிரட்டல்கள். ‘லியோனி, நீங்கள் உடனடியாக ஐயாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்று வாட்ஸ் அப்பில் மிரட்டல்களும் வருகின்றன. என்ன பிரச்னை அவருக்கு? இதோ அவரே சொல்கிறார்...
‘‘திருவண்ணாமலையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைப் பத்திப் பேசுனேன். மாற்றம் முன்னேற்றம் என்று சொல்றார் அன்புமணி. இதுக்கு ஒரு போஸ்டர் போட்டு இருக்கார். ‘சேஞ்ச்... டெவலப்... ஒபாமா‘ங்கிற அமெரிக்க அதிபர் ஒபாமாவோட போஸ்டர்ல இருந்து காப்பி அடிச்சுட்டாங்க. பரீட்சையில ஒரு பையன் பக்கத்துல இருக்க பையனைக் காப்பியடிக்கற மாதிரி, அமெரிக்காவுல ஒட்டுன போஸ்டரை அப்படியே மொழிமாற்றம் செஞ்சி, ‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி’னு ஒட்டிட்டாங்கன்னு சொன்னேன். இந்த போஸ்டர் பக்கத்துல திண்டுக்கல்ல இன்னொரு டாக்டர், போஸ்டர் ஒட்டி இருந்தார். ரெண்டையும் இணைச்சு சொன்னேன். அந்தக் கட்சிக்கு தமிழ்நாடு முழுக்க கிளை இருக்கான்னு கேட்டேன். அந்தக் கட்சிக்கு உண்மையில் எவ்வளவு ஆதரவு இருக்குன்ற ஆதாரத்தைச் சொன்னேன். மரியாதைக்குரிய டாக்டர் அய்யாவும், அன்புமணி ராமதாஸ் அய்யாவும் முதலமைச்சர் ஆக நினைக்கிறதுல தப்பில்லை.அதே நேரத்துல தி.மு.க தலைவரையும் கழக பொருளாளர் ஸ்டாலினையும் மேடைகள்ல தவறா விமர்சனம் செய்றதையும், ஒப்பிட்டு பேசுறதையும் நிறுத்திக்கணும்னு பேசுனேன். இதுதான் நான் திருவண்ணாமலையில் பேசினதோட சாராம்சம்.
நான் பேசினது ஜனவரி 7-ம் தேதி. 8-ம் தேதி பொங்கல் பட்டிமன்றத்துக்குப் போயிட்டேன். அந்த நேரத்துல எல்லாம் எந்தப் பிரச்னையும் ஆகல. 9-ம் தேதி தர்மபுரி தொகுதியில பெண்ணாகரத்தில கூட்டம் நடந்துச்சு. மேடைக்குப் போறப்பவே ஒருத்தர், ‘பா.ம.க பத்தி பேசிடாதீங்க. இது அவங்க பெல்ட்’னு காதுக்குள்ள சொன்னாரு. சரி, எல்லா இடத்திலயும் இப்படித்தான சொல்றாங்கன்னு நினைச்சுகிட்டு, திருவண்ணாமலையில பேசுன மாதிரியே அங்கயும் பேசுனேன். கூட்டம் முடிச்சுட்டு, அடுத்த நாள் கூட்டத்துக்காக புதுச்சேரி கிளம்பி வந்துகிட்டு இருக்கேன். போன் மூலமா டார்ச்சர் ஆரம்பிச்சது. 6.30 மணிக்கு ஆரம்பிச்ச போன் தொடர்ந்து வெவ்வேறு நம்பர்கள்ல இருந்து வந்துட்டே இருக்கு. பேசுறவங்கள்லாம், ‘நீ எப்படி பா.ம.க-வைப் பத்தி பேசலாம்?’னு ஒருமையில அநாகரிகமா பேச ஆரம்பிச்சாங்க. ஒரு கட்டத்துல மன உளைச்சல் அதிகமாகி, போன் சத்தம் கேட்டாலே அலர்ஜி ஆகிடுச்சு. இவங்க பண்ணுன டார்ச்சர்ல எந்த போனையுமே எடுக்கலை. அடுத்து ஒரு வாய்ஸ் மெசேஸ் வந்துச்சு. ‘தொடர்ந்து இதே மாதிரி பேசிட்டு இருந்தா, நாங்க சும்மா இருக்க மாட்டோம். என் பெயர் கவுசி. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்க. பா.ம.க பத்திப் பேசுறதை நிறுத்தலைன்னா தொடர்ந்து போன் டார்ச்சர் கொடுத்துகிட்டே இருப்போம்’’னு சொன்னதோட போட்டோவையும் அனுப்பிவெச்சாங்க.
புதுச்சேரி மடுகரையில் தி.மு.க பொதுக்கூட்டம் 10-ம் தேதி நடந்துச்சு. அதுல நான் பேசுனேன். கூட்டத்தை நடத்த விடக் கூடாதுன்னு பா.ம.க-வினர் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பிட்டு இருக்காங்கன்னு மேடைக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருந்தாங்க. எந்த அசம்பாவிதமும் இல்லாம கூட்டம் முடிஞ்சது. ‘உடனே கிளம்பாதீங்க. நைட் டிராவல் வேண்டாம். உங்க வீட்டுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்கோம்’னு திண்டுக்கல் போலீஸ் போன்ல தகவல் சொன்னதால நைட் புதுச்சேரியில தங்கிட்டேன். காலையில வரும்போது, ‘இப்ப திண்டுக்கல்ல நாங்க முகாம் இட்டிருக்கோம். நீங்க பா.ம.க பத்தி பேசுறதை நிறுத்தலைன்னா உங்க வீட்டு மேல பெட்ரோல் குண்டு போடுவோம்’னு ஒரு மிரட்டல் கால் வந்துச்சு. அதை ரெகார்ட் பண்ணி தலைமைக் கழகத்துக்கு அனுப்புனோம். கழக வழக்கறிஞர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல போய் புகார் கொடுத்திருக்காங்க. இந்த நிலையில, 11-ம் தேதி இரவு 12 மணிக்கு நான் வந்த கார் விபத்துல சிக்கி நான் இறந்துட்டதா வாட்ஸ்அப்ல தகவலை பரப்பிவிட்டிருக்காங்க. அடுத்த நாள் காலையில என் வீட்டு முன்னால 150 பேருக்கு மேல துக்கம் விசாரிக்க கூடிட்டாங்க. நல்லவேளை யாரும் மாலை வாங்கிட்டு வரலை.
அரசியல்ல எதிர் அணியினரை விமர்சனம் செய்து மேடைகள்ல பேச்சாளர்கள் பேசுறது வழக்கமான ஒண்ணு. அதுல மாற்று கருத்து இருந்தா வழக்குப் போடலாம்.மேடைகள்ல விமர்சனம் செய்யலாம். பத்திரிகைகள் மூலமா பதில் சொல்லலாம்.அல்லது அவங்க தொலைகாட்சி மூலமாக் கூட எதிர்ப்பைப் பதிவு செஞ்சிருக்கலாம். ஆனா, அதையெல்லாம் விட்டுட்டு போன் மூலமா டார்ச்சர் கொடுக்கறது, கொலை மிரட்டல் விடுறது..உச்சகட்டமா ஆக்சிடென்ட்ல செத்துப்போயிட்டாருனு வதந்தி பரப்பி விடுறதெல்லாம் என்ன மாதிரியான அரசியல்? இதுதான் அவங்களோட மாற்றம்... முன்னேற்றமா? இது ஜனநாயக நாட்டுல பேச்சாளர்களோட உரிமையைப் பறிக்கும் செயல். இது, பா.ம.க தலைவர்களுக்கு தெரிஞ்சு நடந்திருந்தாலும், தெரியாம நடந்திருந்தாலும் இனிமே இது போன்ற செயல்கள்ல ஈடுபட வேண்டாம்னு அவங்க கட்சிக்காரங்களுக்கு ஆலோசனை சொல்லுங்க. ஏன்னா.. விமர்சனத்தை தாங்கிக்கறவங்கதான் சிறந்த ஜனநாயகவாதியா இருக்க முடியும்’’ என்றார்.
No comments: