Header Ads

இலங்கை விவகாரங்களை கவனிக்க சிறப்பு பிரதிநிதி : இந்திரா பாணியில் பிரதமர் மோடி நடவடிக்கை

இலங்கை விவகாரங்களைக் கவனிக்க, தன் நேரடி கண்காணிப்பின் கீழ், சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்க, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

நாட்டின், 15வது பிரதமராக, கடந்த மாதம், 26ம் தேதி மோடி பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, இலங்கை அதிபர் ராஜபக் ஷேக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு, தமிழகத்தில் உள்ள பா.ஜ., கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.இந்தப் பிரச்னையால், மோடி பதவியேற்பு விழாவை, முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார். பா.ஜ., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., தலைவர் வைகோ, அன்றைய தினம், டில்லியில், ராஜபக் ஷேவுக்கு எதிராக, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.இப்படி ராஜபக் ஷேக்கு, தமிழக அரசியல் கட்சிகள் காட்டிய எதிர்ப்பு, இலங்கை விவகாரத்தில் மோடியின் ஈடுபாட்டை, அதிகரிக்கச் செய்துள்ளதாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:இலங்கை அதிபர் ராஜபக் ஷேயை, தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்த மோடி, மறுநாள் அவருடன் இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது உட்பட, இரு நாடுகளுக்கு இடையேயான பல பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.அத்துடன், இலங்கை மீதான தன் நேரடி கவனத்தை தொடரும் விதத்தில், அந்நாட்டு விவகாரங்களை கவனிக்க, சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்தப் பிரதிநிதி மோடியின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படுவார்.
முன்னாள் பிரதமர் இந்திரா, தன் ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களை கவனிக்க மட்டும், ஜி.பார்த்தசாரதி என்பவரை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல, ஒரு பிரதிநிதியை மோடி நியமிக்க உள்ளார்.அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதி, வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களுடன் செயல்படக் கூடியவராக இருப்பார்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால், இலங்கை மீதான இந்தியாவின் நெருக்கடி அதிகரிக்கும் என்றும், எதிர்ப்புக் கொடி தூக்கிய கட்சிகளின் குரலை ஒடுக்கும் என்றும், தமிழக பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.