Header Ads

உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் கையை கட்டிப் போட்டு… அதிர்ச்சி தகவலளிக்கும் மனைவி

எனக்கு  திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகின்றன. பெற்றோர் நிச்சயித்த திருமணம்தான். நான் நல்ல வசதியான வீட்டில் பிறந்து வசதியானவருக்குத்தான் வாழ்க்கை பட்டுள்ளேன். ஒரு ஏழையை திருமணம் செய்திருந்தால்கூட ஒருவேளை என்னை நன்றாக வைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது. sad-young-ladyதிருமணம் நடைபெற்ற நிமிடத்திலிருந்து இன்று வரை என் கணவர் எனக்கு செய்யும் வன்கொடுமை என்னவென்று சொல்வது. கல்லால் அடித்தால் கூட பரவாயில்லை, அவர் சொல்லால அடிக்கிறார். என் மனசு செத்துவிட்டது. நடைப்பிணம் மாதிரிதான் வாழ்கிறேன்.

என் கணவரைவிட நான் சிறிது சிவப்பாக இருப்பேன். திருமண வரவேற்பின் போது எங்களை வாழ்த்த வந்தவர்களில் சிலர் ‘பொண்ணு தங்க சிலை போல இருக்கா, பிரபல நடிகை ஒருவர் போல இருக்கா, தேவதை போல இருக்கா’ என்றெல்லாம் கூற… அவர் நண்பர் ஒருவர் ஒருபடி மேலே போய் ‘உனக்கு இவுங்க அதிகம் டா’ என்றார். அதுதான் வினையா? என்னை சந்தேகப்படுகிறாரா ஒன்றும் புரியவில்லை. வெளியே சென்றால் நான் எதை விரும்புகிறேனோ அதற்கு நேர் எதிரான பொருளாக எனக்குப் பிடிக்காத ஒன்றை வாங்கிக் கொடுப்பார்.

புடவை கேட்டால் சுடிதார், வெள்ளை நிறம் என்றால் கருப்பு, வெனிலா ஐஸ்கிரீம் என்றால் ஸ்ட்ராபெர்ரி, சினிமா என்றால் பீச், நாய்குட்டி வளர்க்கப் பிடிக்கும் என்று கேட்டேன் பூனைக்குட்டி கொடுத்தார். ஒருநாள் அவர் வார்த்தையை மீறி எனக்குப் பிடித்த உடையை உடுத்தியதற்காக என்னை உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் கையை கட்டிப் போட்டு அறைக்குள் பூட்டிவிட்டார். மூன்று மணி நேரம் கழித்துதான் விடுவித்தார். வேறு ஒருநாள் அவர் பேச்சை கேட்காமல் பாகற்காய் பொரியல் செய்ததால் அன்று எனக்கு அதுமட்டும்தான் உணவு என்று சொல்லி அதையே முழுதும் சாப்பிட வைத்தார்.

ஒருநாள் என் மாமியார் கோயிலுக்குப் போகலாம் என்றார். அதற்கு தயாராகிக் கிளம்பி விட்டேன். அப்போது ஆபீசில் இருந்து வந்தவர் என்னை அழைத்து அவருக்கு நான் கட்டியிருந்த புடவை பிடிக்கவில்லை என்று மாற்ற வைத்தார். யாரும் அவரை எதுவும் கேட்பதில்லை. அவருக்குப் பிடித்த வாழ்க்கையை என்னை வாழ கட்டாயப்படுத்துவது மற்றவருக்கு அவர் என்மீது காட்டும் அக்கறையாகவே தெரிகிறது. ஏன் என்றால் உலகத்தைப் பொறுத்தவரை சத்தம் போட்டு பேசினால், அடித்தால், பணம் கேட்டு துன்புறுத்தினால் தான் வன்கொடுமை என்ற எண்ணம்.

இன்றுவரை என் கணவர் என் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தது இல்லை. என்னை மனதளவில் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே செய்கிறார். கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் இதுவரை நான் மூன்று முறை கருவுற்று தனக்கு குழந்தை இப்போது வேண்டாம் என்று கட்டாய கருக் கலைப்பு செய்ய வைத்துள்ளார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வைத்துள்ளார். என் பிறந்த வீட்டார் தங்கமான மாப்பிள்ளை என்று தங்கத் தட்டில் வைத்து தாங்குகிறார்கள்.அதனால் ‘அவர் இஷ்டப்படி நடந்துகொள்’ என்கிறார்கள். புகுந்த வீட்டாரோ ‘என்னம்மா அவன் உன்மேல் உசிரையே வைச்சிருக்கான் கொஞ்சம் விட்டுப்பிடி’ என்கிறார்கள். எனக்கு வரவர ஆண்கள் மீது வெறுப்பு வருகிறது. ஒரு கீ கொடுக்கும் பொம்மையாக இனி வாழ முடியாது. எனக்கு உதவிக் கரம் நீட்ட யாரும் இல்லை. பணம் இல்லை, வேலை இல்லை, சட்டம் எனக்கு தீர்வு கொடுக்குமா? இல்லை என் இறுதி காலம் வரை இந்த நரக வாழ்வு தானா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

அன்புச் சகோதரி,

ஒருவர் வாழ்வில் எந்தவொரு உறவும் சிறக்க அதில் சம அந்தஸ்து, சமஉரிமை, சமநோக்கு, என்பது அத்தியாவசியமான ஒன்று. அது புனிதமான திருமண பந்தத்திற்கும் பொருந்தும். இருமனங்களின் சங்கமம்தானே திருமணம். அதை ஏனோ ஒரு சிலர் புரிந்து கொள்வதே இல்லை.
உங்கள் விஷயத்தில் உங்கள் கணவரின் ஆதிக்கம் உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் உங்கள் கவுரவத்தை காலில் போட்டு நசுக்கும் செயல் உங்கள் மனதை பெரிதும் பாதித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று உலக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் குடும்ப வன்முறையினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் உலக அரங்கில் அநேக நாடுகள் பெண்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இயற்ற கையொப்பம் இட்டுள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று. அதன் காரணத்தாலே நம் நாட்டில் 2005ம் ஆண்டு குடும்ப வன்முறையிலிருந்த பெண்களை பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் கீழ் ஒரு பெண், தான் வசிக்கும் இல்லத்தில் உடன் வசிக்கும் எந்தவொரு ஆண் உறவினராலும் உடல் ரீதியாக, மன ரீதியாக, வார்த்தை ரீதியாக, பொருளாதார ரீதியாக, பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆட்படும்போது இந்தச் சட்டம் அவர்களுக்கு துணை நிற்கும். அன்பு சகோதரி, உங்கள் கணவருடன் இனி தொடர்ந்து வாழ இயலுமா என யோசியுங்கள். மேற்கூறிய சட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நீங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட பாதுகாப்பு அலுவலரை அணுகி ஒரு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு தேவையான இந்தச் சட்டத்தில் கூறியுள்ளபடி இலவச தங்கும் வசதி, இலவச மருத்துவ உதவி, இலவச சட்ட உதவி அனைத்தும் உடனடியாக கிடைக்க வழிவகை செய்வார்கள். மேலும், உங்கள் கணவருக்கு சம்மன் அனுப்பி ஆலோசனைக்கு அழைத்து நல்ல தீர்வு கிடைக்க முயற்சி செய்வார்கள். உங்கள் கணவர் மனம் திருந்தும் பட்சத்தில் அவருடன் இணைந்து வாழலாம். ஒருவேளை உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் தகுந்த மன நல ஆலோசனை தேவைப்படும் பட்சத்தில் அதனையும் மேற்கொள்ளலாம்.

எந்தவொரு சமரசமும் ஏற்படாத பட்சத்தில் பாதுகாப்பு அலுவலரின் உதவியுடன் அல்லது ஒரு வழக்கறிஞரின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து  வேண்டிய தீர்வை பெற்றுக் கொள்ளலாம். எல்லாம் சரியாக வாழ்த்துகள்.

No comments:

Powered by Blogger.