Header Ads

திரைக்கு பின்னால் ஒரு சாதனையாளர்: கண்டுகொள்ளாத சினிமா உலகம்!

ஒரு படம் 100 நாள் ஓடிவிட்டால் அந்தப் படத்தில் நடித்த ஈ, குருவி காக்காய்கூட தொலைக்காட்சியின் கருப்பு ஷோபாக்களில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து பேட்டி கொடுக்கும். ஒரு சிறிய உள்ளூர் அமைப்பு விருது கொடுத்தால்கூட ஊரெங்கும் போஸ்டர் அடித்து கொண்டாடுவார்கள். ஆனால் 8 தேசிய விருதுகள், 7 மாநில விருதுகள் பெற்ற ஒரு கலைஞர் திரைக்கு பின்னால் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமா உலகமும் அவரது சாதனையை கண்டுகொள்ளவில்லை. அந்த சாதனையாளர் எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத்.

இயக்குனர்கள் படப்பிடிப்பில் அள்ளி வரும் செங்கல் மணல், சிமெண்டையெல்லாம் சரியான விகிதத்தில் கலந்து அழகான சினிமா மாளிகையை கட்டுகிறவர்கள்தான் எடிட்டர்கள். ஒரு படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வதிலும், கதையை சரியான கோணத்தில் ரசிகர்களுக்கு சொல்வதிலும் எடிட்டர்களின் பங்கு மகத்தானது. ஒரு இயக்குனரின் பலத்தையும், பலவீனத்தையும் முழுமையாக அறிந்து வைத்திருப்பவர்கள் எடிட்டர்கள். அப்படிப்பட்ட எடிட்டர்களை கவுரவப்படுத்துவதில் ஏனோ சினிமாவுக்கு தயக்கம். எடிட்டர்களின் பணி பற்றி ரசிகர்களுக்கு அதிகம் தெரியாததே இதற்கு காரணம். எல்லாம் இயக்குனர்களின் பணிதான் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஒரு காலகட்டம் வரை ஒளிப்பதிவாளரின் பங்குபற்றிகூட மக்கள் தெரியாமல் இருந்தார்கள். பின்னர் தெரிந்து கொண்டார்கள். அதுமாதிரி எடிட்டர்களின் பணி பற்றி பின்னாளில் மக்கள் தெரிந்து கொள்ளலாம்.

இனி ஸ்ரீகர் பிரசாத் பற்றி பார்க்கலாம்..

பழம்பெரும் படத்தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத்தின் மருமகன்தான் ஸ்ரீகர் பிரசாத். பாரம்பரிய சினிமா குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஆரம்பத்தில் ஸ்ரீகருக்கு சினிமா ஆசை இல்லை. சினிமாகூட பார்ப்பது இல்லை. அவரது அப்பா ஒரு சினிமா எடிட்டர் மற்றும் இயக்குனர். ஒரு நாள் தந்தை சினிமாவை எடிட் செய்ததை பார்த்த ஸ்ரீகர் தானும் எடிட்டராக வேண்டும் என்று விரும்பினார். இதற்காக நிறைய சினிமாக்களை பார்த்தார். அவற்றை எப்படி எடிட் செய்திருக்கிறார்கள் என்று கவனித்தார். அப்பாவிடம் உதவியாளராக சேர்ந்து எடிட்டிங் கற்றார்.
தெலுங்கில் ஜெகபதி பாபு அறிமுமான சிம்ஹ சொப்பனம்தான் ஸ்ரீகர் அறிமுகமான முதல் படம். 1983ம் ஆண்டு வெளிவந்தது. அமீர்கான் நடித்த ராக் இந்திப் படத்தின் மூலம் புகழ்பெற்றார். இரண்டாவது படமான ராக்கிற்கு முதல் தேசிய விருது கிடைத்தது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக அறிமுகமான படம்தான் ராக்.

இரண்டாவது தேசிய விருது ராக்பிராக் என்ற அஸ்சாமிய படத்தில் கிடைத்தது. ஒரு மனிதன் எப்படி சாமியாராகிறான் என்பதை வித்தியாசமாக சொன்ன சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம் அது. அடுத்து நாக்கு சந்திரமு என்ற ஆங்கில படத்திற்கு கிடைத்தது. இது கர்காடக இசை பாடகிகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பட்டம்மாள், தஞ்சை பிருந்தா ஆகியோரை பற்றியது.

1998ல் சந்தோஷ் சிவன் இயக்கிய தி டெரரிஸ்ட் படத்துக்கு விருது கிடைத்தது. அதிக பிளாஷ்பேக்குளும், குறைவான வசனங்களும் கொண்ட இந்த படத்திற்கு எடிட்டராக பணியாற்றியது மிகவும் சவாலான பணி என்று அப்போது ஸ்ரீகர் பாராட்டப்பட்டார். அடுத்து கேரளாவில் கதகளி ஆடுகிறவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான வனப்பிரஸ்தம் என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றார். அடுத்து தமிழில் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்காக விருது பெற்றார். இது ஒரு சிறுமியின் வாயிலாக இலங்கை பிரச்னையை சொன்ன படம்.

சமீபத்தில் குஜராத் கலவரத்தை மையமாக கொண்டு நந்திதாதாஸ் இயக்கிய ஃபிராக் படத்திற்காக தேசிய விருது பெற்றார். 2010ம் ஆண்டு பல்வேறு படங்களில் பணியாற்றியமைக்காக சிறப்பு ஜூரி விருது பெற்றார்.

ஸ்ரீகர் இதுவரை சுமார் 60 படங்களுக்கு மேல் எடிட்டராக பணியாற்றி உள்ளார். ஆங்கிலம், சிங்களம் மற்றும் 15 இந்திய மொழி படங்களில் பணியாற்றி உள்ளார். மொழிக்கு ஒரு தேசிய விருது பெற்றிருக்கிறார். அலைபாயுதே, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, அங்காடி தெரு, ராவணன், சகுனி, துப்பாக்கி, கடல், தங்க மீன்கள், ஆரம்பம், இவன் வேற மாதிரி, பண்ணையாரும் பத்மினியும் ஆகியவை ஸ்ரீகர் தமிழில் பணியாற்றிய முக்கிய படங்கள்.

"ரசிகர்கள் இரண்டு மணி நேரம் பார்க்கும் படம் எங்கள் கைக்கு 80 மணி நேர படமாக வருகிறது. அதை கதையின் போக்கு மாறாமல், இயக்குனர் சொல்ல நினைக்கும் கதையை விட்டு விலகாமல், ரசிகர்களுக்கு போரடிக்காமல் தருவதுதான் எடிட்டரின் பணி. இது ஒரு தனி கலை. ஒரு நல்ல படைப்பாளியால் மட்டுமே நல்ல எடிட்டராக பிரதிபலிக்க முடியும். புதுமையான கிரியேட்டிவ் உள்ள இளைஞர்கள் எடிட்டிங் துறைக்கு வரவேண்டும். நல்ல திறமையோடு பொறுமையும் உள்ளவர்களால் மட்டுமே நல்ல எடிட்டர்காளாக முடியும்" என்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.

ஒரு நல்ல படைப்பாளியை, சாதனையாளரை வாழ்த்துவோம், பாராட்டுவோம்.

No comments:

Powered by Blogger.