Header Ads

நரேந்திர மோடி கோரிக்கையை இலங்கை நிராகரித்தது

மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற நரேந்திர மோடியின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.

இந்தியா-இலங்கை இடையே 1987-ம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம், நில அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க இத்திருத்தம் வகை செய்கிறது. இதன் மூலம், தமிழர்-சிங்களர் இடையிலான பதற்றம் தணியும் என்று கருதப்பட்டது.ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லிக்கு வந்திருந்தார். அப்போது, தமிழர்களுடன் இணக்கமான உறவு நிலவ, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாகாணங்களுக்கு போலீஸ், நில அதிகாரங்களை வழங்க வேண்டும், 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மோடி வற்புறுத்தினார்.

இந்நிலையில், இந்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இலங்கை பாராளுமன்றத்தில் இதுபற்றி எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் கூறியதாவது:நரேந்திர மோடியுடன் அரசியல் சட்ட பிரச்சினைகள் குறித்து ராஜபக்சே விரிவாக விவாதிக்கவில்லை. ஆனால், மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெளிவாக கூறி விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.