'கோலாகலமாக' நடந்து முடிந்த சினிமா நூற்றாண்டு விழா.. திரைமறைவில் நடந்த 'குதூகலங்கள்'!
ஒரு வழியாக தமிழக அரசின் துணையுடன் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நடந்து முடிந்து விட்டது. ஆனால் திரைக்கு மறைவில் நடந்த பல விஷயங்கள் பெரும் சுவாரஸ்யமாக உள்ளன. ஆனால் திரையுலகினரும், திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களும் இந்த கசமுசாக்கள் குறித்து பெரும் மன வேதனையிலும், விரக்தியுடனும், கோபத்திலும் உள்ளனராம்.
எப்படி நடந்திருக்க வேண்டும் இந்த விழா.. ஆனால் எத்தனையோ பெரிய ஜாம்பவான்களையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு கட்சி விழா போல நடத்தி விட்டார்களே என்று பலரும் மனதுக்குள் புழுங்கியபடி உள்ளனராம்.
இப்படி ஒரு விழாவை நடத்தியதற்குப் பேசாமல் இருந்திருக்கலாம் என்றும் பலர் புலம்புகின்றனராம்.
இவர்களெல்லாம் ஏன் தமிழக அரசுக்கு ஞாபகமில்லாமல் போனது.. குமுறும் திரையுலகினர். சரி இந்த விழாவுக்கு முன்பும், விழாவின்போதும் நடந்த, வெளியில் தெரியாமல் போன சமாச்சாரங்கள் குறித்த ஒரு பார்வை....
கடைசி நேரத்தில் கருணாநிதிக்கு இன்விடேஷன்
திமுக தலைவர் கருணாநிதிக்கும், திரையுலகுக்கும் உள்ள தொடர்பு உலகம் அறிந்தது. ஆனால் விழா தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவருக்கே அழைப்பு கொடுத்தார்களாம்.
கேள்விக்குப் பதில் இல்லை
இப்பத்தான் என் ஞாபகம் வந்ததா என்று அழைப்பிதழுடன் வந்தவர்களிடம் கருணாநிதி சிரித்தபடி கேட்டாராம். ஆனால் அதற்குத்தான் அவர்களால் பதில் சொல்ல முடியாமல் போனதாம்....
கட்டபொம்மனை விட பருத்தி வீரன் பெஸ்ட்...
வசனங்களுக்குப் பெயர் போன படங்கள் பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவை. ஆனால் இந்தப் படங்களை திரையிடவில்லை. மாறாக பருத்தி வீரன், அரவான் போன்றவையெல்லாம் திரையிடும் வரிசையில் இடம் பிடித்திருந்தன.
முதல்வரே நேரடியாக தேர்வு
விழாவின் ஒரு அம்சமாக இதுபோன்ற படங்களைத் தேர்வு செய்யும் பணியை முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக செய்ததாகவும் கூறப்படுகிறது.
சினிமாக்காரர்களை விட நாங்கதாய்யா முக்கியம்
பட விழாவின்போது ஐடி கார்டு வைத்திருந்தவர்களைத்தான் உள்ளே அனுமதித்தனர். ஆனால் பல அதிமுகவினரோ, எங்க கிட்டயே கார்டா என்று தெனாவெட்டாக கேட்டு உள்ளே புகுந்து விட்டனராம். காவல்துறையினரால் தடுக்க முடியவில்லையாம்.
சினிமா விழாவில் அம்மா குடிநீர் குறித்து புகழாரம்...
இது சினிமா விழாவா அல்லது அரசு விழாவா அல்லது அதிமுக விழாவா என்று பெருத்த சந்தேகம் வரும் வகையில் ஒவ்வொருவரி்ன் பேச்சும் இருந்தது. மேடையில் பேசிய திரைப்படத்துறையினர் பலரும் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் பாடினர். குறிப்பாக அம்மா உணவகம், அம்மா குடிநீர் உள்ளிட்டவை குறித்து புகழ்ந்து பேசினர்.
மனோகரா 'வசனகர்த்தா'வுக்கு குட்டு வைத்த ஜெ.
விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியை தாக்கிப் பேசத் தவறவில்லை. குட்டிக் கதையுடன் குட்டு வைத்துப் பேசினார் ஜெயலலிதா. இதைத்தான் சில நாட்களுக்கு முன்பு தனது அறிக்கையில், குட்டிகள் முன்பு பேசுவது தாயின் இயல்புதானே என்று தனது பாணியில் வர்ணித்திருந்தார். மனோகரா, பராசக்தி போன்ற புகழ் பெற்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி....என்பது நினைவிருக்கலாம்.
30வது விருதுதான் ரஜினிக்கு
590 பேருக்கு இந்த விழாவில் விருது கொடுத்தனர். 29 பேருக்கு கொடுத்து முடித்த பிறகுதான் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டார். மேடையேறி வந்த ரஜினி, விருதை வாங்கிய கையோடு வேகமாக கீழே இறங்கிப் போய் விட்டார்.
கஷ்டப்பட்ட கமல்
கமல்ஹாசனுக்கு விருது வழங்கியபோது முதல்வர் முகத்தில் சலனம் இல்லை. கமல்தான் பாவம், ரொம்பக் கஷ்டப்பட்டு சிரித்தபடி விருதை வாங்கிக் கொண்டு இடத்தைக் காலி செய்தார்.
அவங்க பேசட்டும்... நான் கிளம்புறேன்
ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பேசியபோது அனைவரும் அதை உன்னிப்பாக கவனித்தனர். குறிப்பாக, கமல்ஹாசனை ரஜினிகாந்த் வெகுவாக புகழ்ந்து பேசினார். அவரை மகான் என்றும் குறிப்பிட்டு பெருமைப்படுத்திப் பேசினார். ஆனால் அதைக் கேட்கத்தான் அப்போது முதல்வர் ஜெயலலிதா அங்கு இல்லை.
எவ்வளவோ செஞ்சுட்டீங்கம்மா.. விஜய் பன்ச்
விழாவில் விஜய்யும் பேசினார். தலைவா வலியிலிருந்து இன்னும் கூட மீளாத அவர் முகத்தில் வரவழைத்துக் கொண்ட கஷ்டமான புன்னகையுடன் முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்திப் பேசினார். பேச்சின்போது எவ்வளவோ செய்து விட்டார் முதல்வர் என்று அவர் கூறியதை பலரும் நமுட்டுச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டனர்.
லைட்டா வந்து போன கருணாநிதி, விஜய், விஜயகாந்த்
ஒரு வீடியோ படத்தையும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தயாரித்து ஒளிபரப்பியது. அதில் பலருடைய படங்கள், புகைப்படங்கள், படக் காட்சிகள் இடம் பெற்றன. அதில் கருணாநிதி, விஜய் ஆகியோர் சில விநாடிகளே பிளாஷ் போல வந்து போயினர். அதிலும் விஜயகாந்த் நடித்த 2 படங்களின் காட்சியைக் காண்பித்தவர்கள், அதில் விஜயகாந்த் முகம் தெரியாதது போல பார்த்துக் கொண்டது ரொம்பவே குறிப்பிடத்தகுந்தது.
ஆப்சென்ட் எக்கச்சக்கம்
வந்தவர்களை விட வராத பிரபலங்களின் லிஸ்ட்தான் மிகப் பெரியது. தமிழ் சினிமாவுக்குத் தனித் தரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த பிதாமகர்களான பாலுமகேந்திரா, பாரதிராஜா, கவுண்டமணி, எம்.எஸ்.விஸ்வநாதன், வடிவேலு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஷங்கர், மணிரத்னம், பி.சுசீலா, எஸ்.ஜானகி என பலரையும் காணவில்லை.
செம்மொழியால் விருதை இழந்த ரஹ்மான்
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த விழாவில் விருது தரப்படவில்லை. பாவம், தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்தும் அளவு 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கியவர் அவர். ஆனால் செம்மொழியான தமிழ் மொழியாம் என்று பாட்டுப் போட்டதால் அவருக்கு விருது கிடைக்காமல் போய் விட்டதாக சொல்லிக் கொள்கிறார்கள்.
நிறைய புலம்புகிறார்கள்.. ஆனால் எல்லாமே மனசுக்குள்ளேயே.
No comments: