வாலு படத்தில் நடிக்க மறுப்பா?: படஅதிபர் புகாருக்கு ஹன்சிகா பதில்
சிம்புவும், ஹன்சிகாவும் வாலு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். விஜய்சந்தர் இயக்குகிறார். இப்படத்தின் வசன காட்சிகள் முடிவடைந்துவிட்டன. பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது.
இந்த பாடல்காட்சியில் நடித்து கொடுக்க ஹன்சிகா மறுப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ‘வாலு’ படத்தில் நடித்தபோதுதான் சிம்பு– ஹன்சிகா இடையே காதல் மலர்ந்தது. பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இதனால்தான் சிம்புவுடன் பாடல் காட்சியில் நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.
‘வாலு’ படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் ஹன்சிகா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வாலு படத்தில் நடிக்க ஹன்சிகாவுக்கு ரூ. 70 லட்சம் சம்பளம் பேசப்பட்டது என்றும் அதில் 55 லட்சத்தை கொடுத்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.
பாடல் காட்சியை படமாக்கி முடித்ததும் மீதி ரூ. 15 லட்சத்தை தந்து விடுவதாக கூறினேன். ஆனால் ஹன்சிகா கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் நான் பெரிய நஷ்டத்துக்கு உள்ளானேன். ஹன்சிகாவின் கால்ஷிட்டை பெற்று தரும்படி வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த புகாருக்கு ஹன்சிகா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஹன்சிகா சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் கூறும்போது,
‘வாலு’ படத்தில் பாடல் காட்சியை முடித்து கொடுக்க பல தடவை கால்சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பை நடத்தாமல் அந்த தேதிகளை வீணடித்து விட்டனர். ஹன்சிகா தற்போது வேறு படங்களில் நடித்து வருகிறார். வாலு பட தயாரிப்பாளருக்கு அவசரமாக கால்ஷீட் வேண்டுமென்றால் ஹன்சிகா நடிக்கும் மற்ற படங்களின் தயாரிப்பாளர்களிடம்தான் அவர் கேட்க வேண்டும்.
வாலு படத்துக்காக 2 வருடங்களில் ஒன்பது தடவை ஹன்சிகா கால்சீட் கொடுத்துள்ளார். அதனை அவர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர். எல்லா படங்களையும் ஹன்சிகா சமமாகவே கருதுகிறார் என்றார்.
No comments: