சூட்டை கிளப்பியது சோனம் கபூரின் நீச்சல் உடை
தெரியாமல் மாட்டிக்கிட்டேன்பா..’ என்று விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார், பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். சமீபத்தில் வெளிவந்த படத்தில் நீச்சல் உடையில் நடித்து சூட்டை கிளப்பினார். அந்த உடையில் அவரை பார்த்தவர்கள் எல்லாம் ‘இந்த மாதிரி உடையில் தோன்றியிருக்கவேண்டாமே!’ என்று ‘அட்வைஸ்’ செய்ததால், ‘அப்பாடா ஆளை விடுங்கப்பா.. இனி நான் நீச்சல் உடையில் நடிக்கவேமாட்டேன்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க இப்படி ஆடையை குறைத்துவிட்டீர்களோ?
இதுவரை நான் எந்த படத்திலும் அப்படி நடிக்கவில்லை. இப்போது நான் அப்படி நடித்ததற்கு காரணம் உண்டு. இதற்கு முன்பு நான் சற்று உடல் பருமனாக இருந்தேன். அதனால் அந்த உடை பொருந்தாது என்று நினைத்திருந்தேன். இப்போது உடல் மெலிந்துவிட்டேன். நீச்சல் உடை பொருந்திவிட்டது. அதனால்தான் அதை அணிந்து நடித்தேன். நான் ஏற்கெனவே மார்க்கெட்டை பிடித்துவிட்டேன். ஆடையை குறைத்து என்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
வேலையில்லாத இளைஞனை திருமணம் செய்துகொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள். இது நிஜ வாழ்க்கைக்கு பொருந்துமா?
இன்று சம்பாதிக்கும் ஆற்றல் ஆண், பெண் இருவருக்கும் இருக்கிறது. யாரேனும் ஒருவர் சம்பாதித்தாலும் குடும்பத்தை நடத்த முடியும். இந்த சமூகத்தில் பெண்களுக்கும் சில பொறுப்புகள் உண்டு. வேலையில்லாத திண்டாட்டம் இளைஞர்களுடைய வாழ்க்கையை முற்றிலும் ஒடுக்கிவிடக்கூடாது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். வேலையில்லாத இளைஞர்களின் வாழ்க்கையிலும் காதல், கல்யாணம் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. தன் மனைவி சம்பாதிக்கும் பணத்தில் உட்கார்ந்து சாப்பிட பாசமான கணவருக்கு உரிமை உண்டு.
உங்கள் நடிப்பை பார்த்து நசூருதீன் ஷா புகழ்ந்து தள்ளுகிறாரே...?
அவர் என் அப்பாவின் நண்பர். அந்த உரிமையில் சில கருத்துக்களை கூறுவார். நல்லவைகளை ஏற்றுக்கொள்வேன். கெட்டவைகள் என்றாலும் வருத்தப்படாமல் கேட்பேன். என்னை பற்றி கருத்து சொல்ல அவருக்கு இருக்கும் உரிமையை என்னால் தடுக்க முடியாது. ஆனால் அவரது விமர்சனங்கள் பெரும்பாலும் சரியாக இருக்காது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த உலகிலேயே இந்தியாவில் தான் பெண்களை தெய்வத்திற்கு இணையாக உயர்த்திப் பேசும் மக்கள் இருக்கிறார்கள். பெண் ஒரு உயர்ந்த பிறவி என்று போற்றப்படுவதும் இந்தியாவில் தான். அதே சமயம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பெண்களை உயர்த்தவும் வேண்டாம் தாழ்த்தவும் வேண்டாம். நிம்மதியாக அவர்களை வாழவிட்டால் போதும்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க என்ன செய்யவேண்டும்?
ஆண்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது ஒவ்வொரு தாயின் கடமை. ஒவ்வொரு குடும்பத்திலும் தாய்மார்கள் ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு பெண்ணையும் சகோதரியாக மதிக்கும் உணர்வை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும்.
இதில் உங்கள் பங்களிப்பு என்ன?
ஒரு பெண், இன்னொரு பெண்ணுக்கு தரும் ஆதரவைக் காட்டிலும் ஒரு ஆண், இன்னொரு பெண்ணுக்கு தரும் ஆதரவே போற்றுதற்குரியது. இதை நான் பல இடங்களில் பேசியிருக்கிறேன். பாலியல் பலாத்காரத்தை கண்டித்து நடந்த மெழுகுவர்த்தி பேரணியில் கலந்துக் கொண்டேன். மகாபாரத காலத்திலிருந்தே பெண்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அந்த நிலைமாற ஆண்களின் மனநிலை மாற்றப்பட வேண்டும்.
காதலித்து திருமணம் செய்து, சில நாட்கள் வாழ்ந்ததும் விவாகரத்து பெறுகிறார்களே அது பற்றி...?
காதல் வேறு... வாழ்க்கை வேறு...! இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துக் கொள்ள முடியாமல் பல ஜோடிகள் குழம்புகிறார்கள். காதலில் கனவுகளும், எதிர்ப்புகளும் அதிகம். அவை நிஜ வாழ்க்கையின் யதார்த்தங்களோடு ஒத்துப் போவதில்லை. அவர்களின் எதிர்ப்புகள் நிறைவேறாத போது நிராசை ஏற்பட்டு கடைசியில் விவாகரத்தில் முடிந்து விடுகிறது.
இளைய தலைமுறையினருக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
என் பாட்டி ‘இந்த காலத்து பிள்ளைங்ககிட்டே சகிப்பு தன்மை கிடையாது’ என்று அடிக்கடி சொல்லுவார். அதுதான் உண்மை. புதிதாக உறவை ஏற்றுக் கொள்ள சகிப்புத் தன்மை அவசியம். அந்த காலத்தில் பலர் ஒரே குடும்பத்தில் மகிழ்ச்சியாக கூடி வாழ்ந்தார்கள். இந்த காலத்தில் கணவன்–மனைவி இருவர்கூட சேர்ந்து வாழ முடியாத கொடுமை அரங்கேறுகிறது. இது காலத்தின் கோலம்.
சமூக வலைத்தளங்களில் உங்கள் பங்களிப்பு என்ன?
சமூக உணர்வு நம் அனைவருக்கும் தேவை. அதுதான் நாம் வாழ வழி வகுக்கும் உண்மையான கல்வி. அதில் நான் கண்டு, கேட்ட விஷயங்களை எழுதுகிறேன். புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்கிறேன். பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன்.
நீங்கள் நடித்த ‘‘ரஞ்ஜனா’’ படத்தை உங்கள் தந்தை அனில்கபூர் மிகவும் புகழ்ந்து பாராட்டினாராமே...?
ஆமாம். அதில் நான் அரசியல் வாதியாக நடித்திருக்கிறேன். என் நடிப்பு அப்பாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்பா அடுத்து தயாரிக்கும் படத்திலும் எனக்கு அரசியல்வாதி கதாபாத்திரம்தான்.
No comments: