Header Ads

பிரதமர் மோடி நெருக்கடிக்கு இணங்கிய ராஜபக் ஷே: கைதான 3 நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்:பிரதமர் மோடி கொடுத்த நெருக்கடியால், கைது செய்யப்பட்ட மூன்றே நாளில், தமிழக மீனவர்கள் 33 பேரை, இலங்கை அதிபர் ராஜபக் ஷே விடுதலை செய்ததாக, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து மே 30 இரவில், மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்களில், 29 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். மேலும், இன்ஜின் பழுதாகி, காற்றின் வேகத்தால் இலங்கை மன்னார் பகுதிக்கு சென்றுவிட்ட படகையும், 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, மன்னார் மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.இவர்கள் மீது வழக்கு பதியாமல், மன்னாரில் தங்க வைத்திருந்தனர். அவர்களை விடுவிக்க, நேற்று முன்தினம் இலங்கை அதிபர் ராஜபக் ஷே உத்தரவிட்டுள்ளார். 


இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 29 மீனவர்களை விடுவிக்க, நேற்று மன்னார் கோர்ட்டுக்கு இலங்கை அட்டர்னி ஜெனரல், கடிதம் அனுப்பி உள்ளார். மீனவர்கள் ஓரிரு நாளில், ராமேஸ்வரம் வந்து சேர்வர், என, மீனவர்கள் தெரிவித்தனர்.கைதான மூன்றே நாளில் மீனவர்கள் விடுவிக்கப்பட்ட தகவலறிந்த, ராமேஸ்வரம் மீனவர்கள், பிரதமர் மோடியின் முயற்சிக்கு, நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க செயலாளர் தேவதாஸ் கூறியதாவது: மீனவர்களை விடுவிக்க, முதல்வர் ஜெ., எழுதிய கடிதம், பிரதமர் மோடி கவனத்திற்கு சென்றது. மீனவர்களை விடுவிக்க பிரதமர் எடுத்த உறுதியான நடவடிக்கையால், கைதான மூன்றே நாள்களில், 33 பேரும் விடுவிக்கப்பட்டனர். இது மீனவர்கள் வரலாற்றில் முக்கியமானது.இதற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஜெ., மற்றும் இலங்கை அதிபர் ராஜபக் ஷே வுக்கு நன்றி. இருநாட்டு மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.பிரதமர் மோடி அரசுடன், வலுவான நட்புறவு ஏற்படுத்த விரும்பிய இலங்கை அதிபர் ராஜபக் ஷே , நல்லெண்ணத்தில், போதை பொருள் கடத்தல் வழக்கில், இரண்டரை ஆண்டுக்கு மேலாக, சிறையில் வாடிய 5 பேர் உள்ளிட்ட 14 மீனவர்களை விடுதலை செய்ய, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

No comments:

Powered by Blogger.