Header Ads

அண்ணா நகர், நீலாங்கரை மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்

சென்னை: மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். சென்னையில் மசாஜ் சென்டர்களில் வேலைக்கு ஆட்கள் தேவை என ஆன்லைனில் விளம்பரப்படுத்தி அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் சென்னை பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து மாறுவேடத்தில் கண்காணித்தனர். 

அண்ணாநகர் 2வது மெயின் ரோடு ‘எப்’ பிளாக்கில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் பானு (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மண்ணடியை சேர்ந்தவர். அங்கு அவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அடைத்து வைத்திருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டர் ஒன்றிலும் பாலியல் தொழில் நடந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக அதன் உரிமையாளர் சுராஜ் (34) என்பவர் கைது செய்யப்பட்டார். 

அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட வைத்திருந்த வடமாநில இளம்பெண்கள் 3 பேர் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பானு, 2 ஆண்டுகளுக்கு முன் அண்ணாநகரில் தான் வேலை பார்த்த மசாஜ் சென்டரில் போலீசார் சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்து மூடிவிட்டதாக கூறினார். அதன் பின்னர் தனக்கு வருமானம் இல்லாததால் நண்பர்கள் உதவியுடன் இந்த மசாஜ் சென்டரை தொடங்கி இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிவித்தார். சுராஜ் கூறுகையில், ஒரு ஓட்டலில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்ததாகவும், போதிய வருமானம் இல்லாததால் மசாஜ் சென்டர் ஆரம்பித்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் கூறினார். இதேபோன்று சந்தேகப்படும்படியான அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்களை பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.