Header Ads

விமர்சனம் » உன் சமையலறையில்

மொழி, ‛அபியும் நானும் , ‛அழகிய தீயே, ‛தோனி உள்ளிட்ட வித்தியாசமும், விறுவிறுப்புமான திரைப்படங்களை தயாரித்து தந்த பிரகாஷ்ராஜின் தயாரிப்பில், வெளிவந்திருக்கும் மற்றுமொரு மாற்று சினிமா தான் ‛உன் சமையலறையில்... இப்படத்தை தயாரித்திருப்பதுடன் ‛தோனி படத்தை இயக்கி, நடித்தது மாதிரி ‛உன் சமையலறையில் படத்தை பிரகாஷ்ராஜே புதியகோணத்தில் இயக்கி, நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு இளையராஜாவின் இசை மேலும் பலம் சேர்த்திருப்பது ‛பலே சொல்ல வைக்கிறது.

கதைப்படி... தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரியான பிரகாஷ்ராஜூக்கு கல்யாண ஆசை இல்லை. செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடையில் இருக்கும் சினிமா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சினேகா பண்ணும் ஒரு மிஸ்டு போன்கால், ருசியான சாப்பாட்டு பிரியர்களான இருவரையும் ஒருமாதிரி காதலில் தள்ளுகிறது. ஆனால் ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் தெரியாத சினேகா - பிரகாஷ்ராஜ் ஆரம்ப காதலை சேர்த்து வைக்கபோன இருவர், ஜோடி சேர ஆசைப்பட்டதால் இவர்களது காதல் திக்கு தெரியாத திசைக்கு போகிறது. இறுதியில் தூதர்களின் காதல் இவர்களால் இனங்காணப்பட்டு, அவர்களது காதலும், இவர்களது காதலும் கசிந்து உருகியதா? இல்லையா? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடனும், விதவிதமான உணவு பதார்த்தங்களுடனும் சொல்லியிருக்கும் ‛பளிச் படம் தான் ‛உன் சமையலறையில் மொத்தப்படமும்!

வயது கடந்து வரும் காதல், வாய்க்கு பிடித்த சமையல், தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரி மிடுக்கு, என தன் பாத்திரத்தை பார்த்து பார்த்து செதுக்கி பலே சொல்ல வைத்து விடுகிறார் பிரகாஷ்ராஜ்.

சினேகாவும் முதிர்கன்னியாக, கண்ணீரும், காதலுமாக உருக வைக்கிறார்.

இவர்கள் இருவரையும் காட்டிலும் தேஜஸ், சம்யுக்தாவின் காதலில் இளமை ஊஞ்சலாடுகிறது. தம்பி ராமைய்யா, குமரவேல் உள்ளிட்டோரும் பளிச்!

இளையராஜாவின் இசை, பெண் ஒளிப்பதிவாளர் ப்ரீதாவின் ஒளிப்பதிவு நச்! 

முகம் பார்க்காத ஆள்மாறாட்ட காதல், தமிழ்சினிமாவுக்கு புதுதில்லை... என்றாலும், அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் களம், வாய்க்கு ருசியான சமையல் என்பதில் தனித்து நிற்கிறார் இயக்குநர் பிரகாஷ்ராஜ். பேஷ்... பேஷ்...!

ஆதிவாசி ஒருவருக்கு, தன் வீட்டில் பிரகாஷ்ராஜ் அடைக்கலம் தருவது... அந்த ஆதிவாசியின் பின்னணியில் நடக்கும் சதிகளை தெளிவாக இயக்குநர் பிரகாஷ்ராஜ் சொல்ல துணியாதது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும்... ‛உன் சமையலறையில் - ‛வாசம் - நேசம்!

No comments:

Powered by Blogger.