Header Ads

தனியார் விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி கோவை வந்தார் ரசிகர்களை பார்க்கவிடாமல் பாதுகாவலர்கள் தடுத்ததால் திடீர் மோதல்

தனியார் விழாவில் பங்கேற்க கோவை வந்த, கிரிக்கெட் வீரர் டோனியை, ரசிர்கர்கள் பார்க்கவிடாமல் பாதுகாவலர்கள் தடுத்ததால், திடீர் மோதல் ஏற்பட்டது.

அறிமுக விழா 

ஏர்செல் நிறுவனத்தின் மேஜிக் ரீசார்ஜ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி கோவை வந்தார். இதற்காக கோவை ரேஸ்கோர்சில் உள்ள தாஜ் விவாந்தா ஓட்டலில் ஏர்செல் நிறுவனம் சார்பில், அறிமுகவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

டோனி வருவதை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமானோர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் திரண்டு நின்றனர். ரசிகர்கள் யாரும் ஓட்டலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். விழாவில் டோனி கலந்து கொண்டு, புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் ஏர்செல் நிறுவன நிர்வாகி சங்கர நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டோனி பங்கேற்பு 

விழாவில் கலந்து கொண்ட டோனியிடம் பேட்டி எடுப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் 2 மணி நேரம் காத்திருந்தனர். ஆனால் டோனி எதுவும் பேசாமல், மவுனமாய் சிரித்தபடி, ஒரு சில நிமிடங்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றுவிட்டு, வெளியேறினார். விமான நிலையத்திற்கு செல்வதற்காக டோனிக்கு, ஓட்டல் நுழைவாயிலில் உயர்ரக கார் தயார் நிலையில் இருந்தது.

காரில் ஏறுவதற்கு டோனி வரும் போது பேட்டி எடுத்து கொள்ளலாம் என்று பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தனர். லிப்டில் இருந்து இறங்கிய டோனி, நேராக சென்று காரில் ஏறினார். அவருக்கு 2 பக்கமும் சென்னையை சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர்கள் கைகோர்த்து, யாரையும் அருகில் நெருங்க விடாமல் தடுத்தனர்.

முற்றுகை போராட்டம் 

டோனி காரில் இருப்பதையாவது பார்க்கலாம் என்று, ஏராளமான ஆண், பெண் ரசிகர்கள் முண்டி யடித்தபடி சென்றனர். அப்போது புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிக்கையாளர்களும் காரின் அருகில் சென்றனர். அப்போது காரின் 2 புறமும் தொங்கியபடி நின்ற, பாதுகாவலர்கள், காருக்கு மிகவும் அருகில் நின்று கொண்டு இருந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை, காருக்கு வழிவிடுவதற்கு ஒதுக்குவது என்ற பெயரில் தள்ளிவிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பின்னர் டோனியின் கார் அதிவேகத்தில், ஓட்டலை விட்டு வெளியேறியது. இதனால் பாராமுகமாக சென்ற டோனியை கண்டித்து, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் பின்னால் வந்த பாதுகாவலர்களின் காரை செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.

போலீஸ் குவிப்பு 

இதையடுத்து ஓட்டல் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களை சமாதானப்படுத்தினார்கள். அதன்பின்னர் பாதுகாவலர்களின் வாகனம் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும், டோனியின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Powered by Blogger.