Header Ads

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா —
நான் 38 வயது பெண். எட்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். எனக்கு, 2002ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 35 பவுன் நகையும், 25 ஆயிரம் ரூபாய் வரதட்சணையும், 2 லட்ச ரூபாய்க்கு, சீர்வரிசையும் கொடுத்தனர். என் கணவர், அவர் தம்பி, மாமனார், மாமியார் ஆகியோர் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தோம். இரு நாத்தனார்களுக்கு எனக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது. வீட்டிலேயே சின்ன பெட்டி கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர். என் கணவர், எலக்டிரிக் டிப்ளமோ படித்தவர்; கேட்டரிங்கும் தெரியும். திருமணத்துக்கு முன்பே வெளிநாடு போய் திரும்பி வந்தவர், பின், வெளிநாடு போக முயற்சி செய்யவில்லை. திருமணத்துக்கு முன், என் கணவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. திருமணத்துக்கு பின், எப்போதாவது குடிப்பார். நான், 10வது வரை தான் படித்துள்ளேன்.
என் மாமியார் இருக்கும் வரை, குடும்பம் நன்றாக இருந்தது. மாமியார் இறந்தபின், என் கொழுந்தனுக்கு திருமணம் நடந்தது. அப்போது, வீட்டை விற்பது குறித்து, பிரச்னை ஏற்பட்டது. என் மாமனாரும், கொழுந்தனாரும், நாத்தனார்களின் கட்டாயத்தில் வீட்டை விற்று, சரி சமமாக பங்கு போட்டனர். இதில், என் கணவருக்கு, ஒன்பது லட்சம் ரூபாய் பங்கு வந்தது. அதில், கார், டூவிலர், வீட்டு மனை வாங்கினார்.
இந்நிலையில், மெயின்ரோட்டில், அபார்ட்மென்ட் ஒன்றை என் தகப்பனார், என் பெயரில் வாங்கி கொடுத்தார். அதில் தான் குடி இருந்து வருகிறோம். பூர்வீக வீட்டில், என் கணவரின் தாய்மாமனுக்கு, எழுத்து மூலமாக இல்லாமல், வாய்மொழியாக ஒரு கடை பங்கு இருந்தது. (அவர் வெளிநாட்டில் இருக்கிறார்.) போலி ரிகார்டுகள் தயார் செய்து, அந்த கடையை, தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார் என் கணவர். வீட்டை விற்பதற்கு முன்பே, என் நகை மற்றும் என் மகளுக்கு என் வீட்டினர் போட்ட, 6 பவுன் நகையை விற்று, வியாபாரம் செய்கிறேன் என்று கூறி, கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டார். பின், இடம் விற்ற போது, 15 பவுன் நகை வாங்கி கொடுத்தார்.
வியாபாரம் செய்கிறேன் என்று கார், டூவிலர், வீட்டு மனை என, எல்லாவற்றையும் விற்று, கூட்டாளிகளுடன் சேர்ந்து குடி, சீட்டாட்டம் என்று எல்லாவற்றையும் தொலைத்து விட்டார்.
பல வகையான பிராடு வேலைகள் செய்து, சொத்தை அழித்ததோடல்லாமல், ஊர் பூராவும் கடன் வாங்கியதால், கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்தனர். 'கடன்களை அடைத்துவிட்டால், ஒழுங்காக வேலை செய்து, குடும்பத்தை நடத்துவேன்...' என்று சொன்னதால், என் தகப்பனாரிடம் சொல்லி, கடனை அடைக்க ஏற்பாடு செய்தேன்.
கடந்த, 2009ல் எனக்கு இரண்டாவது குழந்தை தங்கியபோது, எனக்கு உடல்நலம் சரியில்லாததாலும், துணைக்கு யாரும் இல்லாததாலும் பிரசவத்திற்காக, அப்பா வீட்டிற்கு வந்து விட்டேன். ஏழு மாதத்தில், குறை பிரசவத்தில், ஆண் குழந்தை பிறந்தது. ஒரு மாதம் இன்குபேட்டரில் வைத்து வைத்தியம் செய்து, குழந்தையை பிழைக்க வைத்தார் என் அப்பா. 
என் கணவர் என்னை ஒழுங்காக வைத்து குடும்பம் நடத்துவதாக கூறியதால், இரண்டு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி கொடுத்து, அனுப்பி வைத்தார்.
சொத்து பூராவும் அழிந்துவிட்ட நிலையில், வேலைக்கும் போகாமல், கூட்டாளிகளுடன் சேர்ந்து குடித்து, கும்மாளம் அடிப்பதுடன், தினமும் என்னிடம் குடிக்க பணம் கேட்டு சண்டை போடுவதும், காது கூசும்படியான வார்த்தைகளால் திட்டுவதும், அடிப்பதுமாக இருக்கிறார்.
கைக்குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால், சிகிச்சைக்காக நான் அப்பா வீட்டிற்கு வந்திருந்த போது, என்னுடன் வந்து தங்கியிருந்த என் கணவர், என் தகப்பனாரின் ஏ.டி.எம்., கார்டை எடுத்து, 75,000 ரூபாய் வரை, எடுத்து விட்டார். போலீசில் புகார் கொடுத்து, கேமராவில் பார்த்தபோது தான், பணத்தை எடுத்தது என் கணவர் என்று தெரிந்தது. பின், மருமகன் என்பதால், புகாரை வாபஸ் வாங்கி விட்டார் என் அப்பா.
நானும் குழந்தைகளும், அப்பா வீட்டிலிருந்து ஊருக்கு திரும்பியதில் இருந்து, குடும்ப செலவுக்கும், வைத்திய செலவுக்கும் என் அப்பா தான் பணம் தருகிறார்.
இதற்கிடையில், எனக்கு வயிற்றில் கட்டி ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதற்கும், என் அப்பா தான், செலவு செய்தார்.
என் அப்பாவுக்கு, 78 வயது; ஓய்வூதியர். மாதம், 10,000 ரூபாய் பென்ஷன் வருகிறது. இதைத் தவிர, வேறு எந்த சொத்தும் எங்களுக்கு இல்லை. என் தம்பி ஒரு பைனான்ஸ் கம்பெனியில், 10,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கிறான். அவனுக்கு திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
என் கணவர், வாங்கிய கடன்களை அடைத்தது போக, என் குடும்பத்தார், இதுவரை, 10 லட்சம் ரூபாய் வரை, அவருக்கு கொடுத்து இருக்கின்றனர்.
இரண்டு மூன்று தடவை என் உறவினர்கள் வந்து, பஞ்சாயத்து செய்தனர். அப்போதெல்லாம், 'இனி ஒழுங்காக இருக்கிறேன்; குடிக்க மாட்டேன்; வேலைக்கு போய் சம்பாதித்து, குடும்பம் நடத்துகிறேன்...' என்று சொல்வார். பின், வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும்.
போலீசிலோ, ஜமாத்தில் சொன்னாலோ குடும்ப மானம், மரியாதை போய் விடுமே என்று கவலைப்படுகிறேன். என் தகப்பனாரிடம் சொல்லி, ஏதாவது தொழில் செய்ய ஏற்பாடு செய்யலாம் என்று நினைத்தால், பொறுப்பு இல்லாத இவரை நம்பி ஏற்பாடு செய்யவும் பயமாக இருக்கிறது.
என் கணவரை குடிப்பதில் இருந்து மீட்கவும், திருத்தவும் ஏதாவது வேலை செய்து சம்பாதித்து குடும்பம் நடத்துவதற்காகவும், நான் என்ன செய்ய வேண்டும். எனக்கு நல்ல அறிவுரை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.

அன்புள்ள மகளே —
குடிப்பழக்கத்தை மிகப்பெரிய பாவமாக கருதும் இஸ்லாமில் பிறந்த உன் கணவன், பெரும் குடிகாரனாய் விளங்குவது ஆச்சரியமாக உள்ளது. 'ஒரு குடிகாரன் நோய்வாய்பட்டால், அவனை நலம் விசாரிக்க போக வேண்டாம்' என்கிறது இஸ்லாம். 
இஸ்லாமில், அதே போல், வரதட்சனை வாங்குவதும் குற்றம் தான் . உன் கணவன் வரதட்சணை வாங்கியிருப்பதுடன், வீட்டை விற்றதில் வந்த பங்குத் தொகையான ஒன்பது லட்சத்தை, குடி, சூதாட்டத்தில் இழந்துள்ளார். உன் தம்பியின் இரு சக்கர வாகனத்தை திருடியதுடன், உன் தந்தையின், ஏ.டி.எம்., கார்டை திருடி பணம் எடுத்துள்ளார். உன் குடும்ப நலனுக்காக, உன் தந்தை பதினைந்து லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதுடன், உன் தினசரி குடும்ப செலவை, உன் தந்தைதான் கவனித்து வருகிறார்.
உன் கணவனின் மோசமான நடத்தைக்கு, நீயும், உன் தந்தையும் தான், முழுமுதல் காரணம். உன் கணவனுக்கு உன் தந்தை, கேட்கும் போதெல்லாம், பணம் தரும் ஒரு அட்சய பாத்திரம். உனக்கு, 2002ல் திருமணம் நடத்திருக்கிறது. கணவனின் துர்நடத்தை தெரிந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே அவரை, ஜமாஅத் மூலம் விவாகரத்து செய்துவிட்டு, நீ மறுமணம் புரிந்திருக்கலாம்.
சரி... இனி நீ செய்ய வேண்டியது...
நீயும், உன் தந்தையும் சேர்ந்து, நீங்கள் இணைந்திருக்கும் ஜமா அத்தில், உன் கணவனின் துர்நடத்தை பற்றி எழுத்துப்பூர்வ புகார் கொடுங்கள். யாருக்கும் அடங்காத உன் கணவன், ஜமாஅத்தாருக்கு கட்டாயம் அடங்குவார். 'இனி குடிக்க மாட்டேன்; போதை லாகிரி வஸ்துகளை உபயோகிக்க மாட்டேன்; யாரிடமும் வட்டிக்கு கடன் வாங்க மாட்டேன்; ஐந்துவேளை பள்ளிவாசலுக்கு தொழ வருவேன்...' என, உன் கணவரை எழுதி கொடுக்கச் சொல்லும் ஜமாஅத். ஜமாஅத்தை மீறி உன் கணவன் நடப்பாரேயானால், உன் கணவரிடமிருந்து விவாகரத்து பெறு.
இரண்டு குழந்தைகளுடன் வரும், பெண்ணை மறுமணம் செய்து கொள்ள, இஸ்லாமில் தகுந்த வரன் கிடைக்கவே செய்வர். கணவனை முழுக்க சார்ந்திருக்காமல், கைத்தொழில் எதையாவது கற்றுக்கொள். உன் ஐந்து சகோதரிகள் மற்றும் ஒரு இளைய சகோதரன் குடும்பத்தை அன்பாய், அனுசரித்து, அரவணைத்து போ. உன் குடும்ப நலனுக்கே பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் தந்தை மீது, நன்றி கலந்த பாசத்தை கொட்டு. உன் குழந்தைகளுக்கு பொதுக் கல்வியுடன், மதக்கல்வியையும் கற்றுக்கொள்ள வை.
உன் கணவர் திருந்த இறுதி முயற்சியாய், அதிகாலைத்தொழுகை ப்ளஸ் ஆறு மாத நோன்புகள் வை. அல்லாஹ்வின் அருளால் உன் கணவன் குடிப்பழக்கத்திலிருந்து கட்டாயம் மீள்வார்.
— என்றென்றும் தாய்மையுடன் 

No comments:

Powered by Blogger.