Header Ads

பிரபல நடிகைகளின் அந்தரங்கங்களை அலசும் சத்ருகன் சின்கா

வெற்றிப் படங்கள் பலவற்றின் மூலம் இந்திய ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் சத்ருகன் சின்கா. இவர் பிரபல நடிகர்–நடிகைகள் அனைவருடனும் சகஜமாக பழகும் இயல்புடையவர்.  அவர்களில் சிலரின் அந்தரங்க வாழ்க்கைகளையும், அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் சுவாரஸ்யமாக அலசுகிறார்...

நடிகர் ராஜேஷ் கண்ணாவுடன் உங்கள் அந்த நாள் நினைவுகள்..?

அந்த காலத்து கதாநாயகர்கள் எல்லாம் அவரைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள். அவர் போகும் வழியெல்லாம் பெண்கள் கூட்டம் அலைமோதும். அவருடைய ஒரு பார்வைக்காக ஏங்காதவர்களே இருக்கமுடியாது. அவருடைய ஸ்டைல் ரசிகர்களிடம் நன்றாக எடுபட்டது. 

டிம்பிள் கபாடியா, ‘பாபி’ படத்தில் நடித்து புகழின் உச்சியை பிடித்தவர். ராஜேஷ் கண்ணா அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

அரசியலில் நுழைந்தார். ஆனால் சினிமா அளவுக்கு அங்கே புகழ்கிடைக்கவில்லை. பிரபல இந்தி நடிகை டீனா முனிம்–ராஜேஷ் கண்ணா பற்றி எழுதாத பத்திரிகைகளே இல்லை. அதையெல்லாம் அவர் ஆட்சேபிக்கவேயில்லை. திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு முக்கியமானது என்று அவர் உணர வெகுகாலம் பிடித்தது. பிறகு மனைவியோடு சேர்ந்து வாழ்ந்தார். தன்னைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் செய்தியாக வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பார். ரகசியத்தை அவர் பாதுகாப்பதில்லை. ரகசியங்கள் வெளியாவது தனது இமேஜை பாதிக்கும் என்று அவர் நினைப்பதில்லை. டிம்பிள் போன்று ஒரு அருமையான மனைவி கிடைப்பது கஷ்டம் என்று நான்  அவரிடம் கூறியிருக்கிறேன். பதிலுக்கு ‘என்னைப்போன்று ஒரு நல்ல கணவன் அவளுக்கு கிடைப்பதும் கஷ்டம் என்று அவளிடம் சொல்லிவை’ என்பார்.

சினிமா வேறு.. நிஜ வாழ்க்கை வேறு! சினிமாவில் ஹீரோவாக இருக்கும் பலர் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பதில்லை. காரணம், சினிமா கற்பனையிலேயே அவர்கள் வாழ நினைப்பதுதான்!

அமிதாப்பச்சனைப் பற்றி...?

வெற்றிபெற்ற மனிதர்களை அன்னாந்துப் பார்க்கும் பலர் அவர்களை உயர்த்திவிட்ட உழைப்பு, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மை, நல்ல பண்பு போன்றவைகளை எண்ணிப் பார்ப்பதில்லை. அமிதாப்பச்சன் தயாரிப்பாளர்களை பெரிதும் மதிப்பவர். ஒரு சிறு கஷ்டம்கூட அவர்களுக்கு தரமாட்டார். நேரத்தோடு படப்பிடிப்பிற்கு வந்துவிடுவார். சக நடிகர்கள் அவரைப் பார்த்து சரியான நேரத்திற்கு வந்துவிடத் தொடங்குவார்கள். தன்னம்பிக்கை என்பது அவருடைய மூலதனம். சிலர் லேசாக உடல்நலம் பாதிக்கப்பட்டாலே படப்பிடிப்பிற்கு வரமாட்டார்கள். இவர் அப்படி அல்ல, தன்னுடைய சிரமம் எதையும் வெளிக்காட்டமாட்டார்.  

ஜெயாபாதுரிரியை திருமணம் செய்தார். பின்பு இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஜெயாவை பிரிந்துவிடும் யோசனையில் இருந்தார். அப்போது ‘‘சில் சிலர்’’ என்ற சினிமா காஷ்மிரீல் உள்ள இயற்கை காட்சிகளோடு அதிக பொருட் செலவில் தயாரானது. அந்த படத்தின் கதை கிட்டத்தட்ட அவர் வாழ்க்கையோடு இணைந்தது. அப்போது தன்னுடன் நடித்த ரேகாவை திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டிருந்தார். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் “சில் சிலர் படம் வெற்றிபெற்றால் நான் என் மனைவி 
ஜெயாவை பிரிந்து, ரேகாவை திருமணம் செய்துகொள்வேன்” என்று பகிரங்கமாக அறிவித்தார். படம் வெளியானது.

ரசிகர்கள் படத்தைப் பார்த்து கொந்தளிக்க, தியேட்டர் உரிமையாளர்கள் வேதனையடைந்துவிட்டார்கள். கடைசியில் படம் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளர் அமிதாப்பிடம் ‘உங்கள் காதல் விளையாட்டுக்கு நான்தானா கிடைத்தேன்’ என்று வசைபாடி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார்.  

அப்புறமென்ன அமிதாப்புக்கு எல்லா இடங்களிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதனால் ரேகாவை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தை கைவிட்டார். சொந்த வாழ்க்கையை, தொழில் வாழ்க்கையோடு இணைக்கக் கூடாது என்பதற்கு அவருக்கு கிடைத்த ஒரு பாடம் இது. ஆனால் எல்லோரிடமும் பணிவாக நடந்துக்கொள்ளும் அவர் பழகுவதற்கு இனிமையான மனிதர்.

தர்மேந்திரா–ஹேமா திருமணத்தில் தலையிட்டீர்களாமே?

நான் ‘இரண்டாவது திருமணம் வேண்டாம்’ என்றேன். தர்மேந்திரா கேட்கவில்லை. ஹேமாவின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கெல்லாம் ஓடிப்போய் விடுவார். ‘வேண்டாம் இந்த விளையாட்டு. இது உன் தொழில் வாழ்க்கையை பாதிக்கும்’ என்றேன். அப்போதெல்லாம் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொள்வார். 

பொதுவாக ஒரு நடிகரை பார்க்கும்போது, இப்போது எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள்? என்று கேட்பார்கள். ஆனால் தர்மேந்திராவை பார்ப்பவர்கள் இப்போது யாரை காதலித்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்பார்கள். அவர் தன்னுடன் நடிக்கும் எல்லா நடிகைகளையும் காதலிக்க ஆரம்பித்துவிடுவார். அது அவர் சுபாவம். 

ஹேமமாலினி, தர்மேந்திராவின் காதலை ஏற்கவில்லை என்று தெரிந்ததும் மனம் உடைந்துப்போனார். எல்லோரிடமும் சொல்லி ஆதங்கப்பட்டார். பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள். தர்மேந்திரா மனம் திறந்து பேசக்கூடியவர். குழந்தை உள்ளம் அவருக்கு! 

வினோத் மெஹராவின் நான்காவது திருமணம் பற்றி..?

இந்த கேள்விக்கு பதில் சொல்வது கொஞ்சம் சிரமம். ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் நிறைய சிக்கல்கள்! வினோத் நல்ல நடிகர். நல்ல நண்பரும்கூட. அவருடைய முதல் திருமணம் ரேகாவுடன் நடந்தது. ஆரம்பத்திலிருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடுதான். சிலருடைய வாழ்க்கையில் என்னகுறை என்றே கண்டுபிடிக்க முடியாது. யார்மேல் தவறு என்றே சொல்ல முடியாது. எத்தனையோ வாக்குவாதங்களுக்கு மத்தியில் ஒன்றரையாண்டு காலம் எப்படியோ ஒன்றாக வாழ்ந்துவிட்டார்கள். பிறகு கவுரவமாக பிரிந்துவிட்டார்கள்.

நான் அவர்கள் இருவரோடும் சேர்ந்து விருந்து சாப்பிட்டிருக்கிறேன். அவர்களை சமாதானப்படுத்த பேசிப் பார்த்தேன். அவர்களது வாழ்க்கை விளங்காத புதிராக இருந்தது. ரேகாவின் கூற்றுப்படி பார்த்தால் அவர்கள் ஒன்றரையாண்டு காலம் தாம்பத்ய வாழ்க்கை வாழவேயில்லை. அதனைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இரண்டாவது மனைவி மீனா மிகவும் நல்லபெண். ஆனால் பல பிரச்சினைகளால் அவர்களது வாழ்க்கை தோல்வி அடைந்தது. அதற்காக தன்னுடைய சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை இழந்தார், வினோத். 

மூன்றாவதாக பிந்தியா கோஸ்வாமியை விரும்பித் திருமணம் செய்துகொண்டார். அவரைப் பற்றி அதிகம் பேசாமலிருப்பதே நல்லது. காரணம் அவர் இப்போது வேறு ஒருவருடைய மனைவி. மூன்றாவது திருமணத்தில்தான் வினோத் முற்றிலும் உடைந்துபோனார். ‘திருமணத்திற்கும் எனக்கும் ராசியில்லை. இனி என் வாழ்க்கையில் திருமணப் பேச்சே எடுக்கமாட்டேன்’ என்றார். 

ஒருநாள் தயாரிப்பாளர் சுபாஷ் கய் அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். கண்களில் கண்ணீரோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு ‘‘சத்ருஜீ என்னை யாருக்கும் பிடிக்கவில்லையாம். எல்லோரும் என்னை விட்டுப் போய்விட்டார்கள். தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். போதும் இந்த நரகம்’ என்று மனம் நொந்து அழுதார்.

அறிவு, அழகு, புகழ், செல்வம் எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது அவருடைய வாழ்க்கை.

மற்றவர்கள் வாழ்க்கையைப் பற்றி பேச நமக்கு சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அவர்களை வேதனையிலிருந்து மீட்டுவர நம்மால் முடியுமா? இப்போது அவருடன் இருப்பது நான்காவது மனைவி. இதுவரை கிடைக்காத எல்லா சந்தோஷமும் அவருக்கு இனி கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டேன்.

No comments:

Powered by Blogger.