Header Ads

திடீர் திருப்பங்களால் திணறும் அரசாங்கம்

கடந்த சில நாட்களில் இலங்கை சந்தித்துள்ள முக்கியமான பல திருப்பங்கள், நிகழ்வுகள் அடுத்தடுத்த கட்டங்களில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்பபை கிளறி விட்டுள்ளன.
முதலாவது - வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டதும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியும்.

இரண்டாவது - போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கையில் ஐநா தோல்வியடைந்து விட்டது என்று ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் பொதுச்சபைக்கூட்டத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.

மூன்றாவது - அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூற இலங்கை அரசாங்கம் தவறினால், சர்வதேச விசாரணைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள எச்சரிக்கை.

நான்காவது - மாகாண சபைகளுக்கு காணிகளின் மீது உரிமை செலுத்தும் அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு.

இந்த நான்கு முக்கிய விடயங்கழைளயும் சுற்றி பல்வேறு உப நிகழ்வுகள் நடந்துள்ளன. பல்வேறு தரப்பினரதும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள முக்கியமான நெருக்கடி மிக்க காலப்பகுதி இதுவாகும்.

ஜெனிவாவில் இரண்டு ’முறை தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோது கூட இலங்கை அரசாங்கத்துக்கு இராஜதந்திர முனையில் மட்டும் தான் அழுத்தங்கள் இருந்தன.

ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பன்முனை அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்தை சிக்கலானதொரு கட்டத்துக்கு இழுப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன.

போரின் இறுதிக்கட்டத்தில் ஐநா தோல்வியைத் தழுவிவட்டது என்று பான் கீ மூன் ஒப்புக்கொண்டது பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாடுகளில் இருந்து தவறிவிட்டது என்பதையே குறிக்கிறது.

பொதுமக்களுக்கு எந்த இழப்புகளுமின்றியே போர் செய்ததாக இலங்கை அரசாங்கம் இன்னமும் வாதிட்டு வரும் நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு முன்பாகவே பான் கீ மூன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறிய ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும் அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட உள்ளக விசாரணைகளின் முடிவில் தான் ஐநா தோல்வியடைந்து விட்டது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

போரின இறுதியில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்ற இலங்கை அரசின் கருத்தை உள்ளக விசாரணை அறிக்கை ஏற்றுக் கொண்டிருந்தால் ஐநா தோல்வியடைந்து விட்டதாக கூறியிருக்க வேண்டியதில்லை.

போரின் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றால் புலிகளைக் காப்பாற்றுவதில் ஐநா தோல்வியடைந்து விட்டது என்றே அர்த்தமாகி விடும்.

விடுதலைப் புலிகள் குறித்து ஐநா விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

பொதுமக்களைப் பாதுகாக்கும் கட்டுப்பாடுகள் குறித்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அத்படியே தான் இலங்கை ஐநா தோல்வியடைந்து விட்டது என்று பான் கீ மூன் ஒப்புக்கொண்டிருந்தார்.

அதுவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்பாகவே தான் அவர் இதனைக் கூறியிருந்தார்.

பான் கீ மூன் உரையாற்றிய சில மணி நேரங்கள் கழித்து பொதுச்சபையில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதுபற்றி எதுவுமே கூறவில்லை.

அவர் மறைமுகமாக அமெரிக்காவைச் சாடுவதிலேயே கவனம் செலுத்தியிருந்தார். எது எவ்வாறாயினும் பான் கீ மூனின் உரை போரின் போது தமிழ் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன என்பதையும் அதில் ஐநா வுக்கு பங்குள்ளது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இதன்மூலம் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் மீது உலகமே தொடுத்த போராக செய்த தவறாக இது வரலாற்றில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.

ஐநா பொதுச்செயலரின் உரை நிகழ்த்“தப்பட்ட மறுநாள் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24வது அமர்வில் தன்து இலங்கைப் பயணம் தொடர்பான வாய்மூல அறிக்கையை சம்ர்ப்பித்திருந்துார் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை. அந்த அறிக்கையில் தனது இலங்கைப் பயணத்தின் கண்ட அறிவுகளைக் கொண்டு இலங்கை மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவற்றில் உச்சக்கட்டமான குற்றச்சாட்டு போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு எதிரான நம்பகமான, சுதந்திரமான விசாரணைகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுவாகும்.

இதன் தொடர்ச்சியாக இலங்கை அரசுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அவர் காலக்கெடு கொடுத்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான, சுதந்திரமான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நடத்தத் தவறினால் சர்வதேச சமூகத்துக்குச் சொந்தமான விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் பொறுப்புள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.

நவநீதம்பிள்ளை இவ்வாறு எச்சரிப்பது இதுதான முதல் தடவையல்ல. ஆனால் இது தனிப்பட்ட ரீதியாக அவர் கொடுத்துள்ள எச்சரிக்கையோ அல்லது வெளியிட்ட கருத்தோ அல்ல.

இம்முறை அவரது எச்சரிக்கை காலக்கெடு ஒன்றை முன்வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான அறிக்கைகளை அளிக்குமாறு ஐநா மனித உரிமைகள் பேரவையினால் பொறுப்புகள் அளிக்கப்பட்டவர் என்ற வகையில் அவர் கொடுத்துள்“ள எச்சரிக்கை இது.

இந்தக் காலக்கெடுவை விதிக்கும் அதிகாரம் நவநீதம்பிள்ளைக்கு இல்லையென்று அரசாங்கம் கூறியுள்ள போதிலும் இந்த எச்சரிக்கை உதாசீனப்படுத்தக்கூடிய ஒன்று அல்ல. எது எவ்வாறாயினும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.

அதை நிறைவேற்றத் தவறினால் இலங்கைக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஏற்கனவே அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இப்போதும் கூட பொறுப்புக் கூறத் தவறநினால் சர்வதேச விசாரணையை எதிர்நோக்க நேரிடும் என்று நவநீதம்பிள்ளையின் கருத்தை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் அடுத்த ஆறு மாதங்களில் இலங்“கை அரசாங்கம் தெளிவானதொரு நகர்வை மேற்கொண்டேயாக வேண்டிய நிலையில் உள்ளது. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கான பொறிமுறையை உருவாக்குவதில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளால் அமெரிக்காவுக்கும், ஐநாவுக்கும் சிக்கல்கள் இருந்தாலும் இந்த விவகாரத்தை இடைநடுவில் கைவிட்டுவிட முடியாது.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஏதோவொரு வழியில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவோ அழுத்தம் கொடுக்கவோ அமெரிக்கா தயங்காது.

இந்த நிலைமை இலங்கைக்கு மிகவும் நெருக்கடி கொடுக்கக் கூடியது.

இதற்கிடையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தி முடித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் வெளியுலகில் பிரசாரம் செய்து ஆதாயம் பெற முனைந்தாலும் அங்கும் அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் தொடரப் போகின்றன.

ஏனென்றால் வடக்கு மாகாணசபையுடன் ஒத்துழைத்துச் செயற்படுமாறும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்குமாறும் அஅமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்துகின்றன.

ஆனால் அரசாங்கத்தினால் அவ்வாறு ஒத்திசைந்து செயற்படுவது இலகுவானதல்ல.

அவ்வாறு ஒத்திசைந்து செயற்படவும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கவும் அரசாங்கத்தைச் சுற்றியுள்ள அடிப்படைவாதக் கூட்டாளிகள் விடப்போவதில்லை.

அதுவும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு கிடையாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இதைவைத்து மாகாணசபைகளை நசுக்க அரசாங்கமும் அடிப்படைவாத சக்திகளும் முயற்சிக்கும்.

இந்தத் தீர்ப்புஎ இந்தியாவுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாகவே இருக்கும்.

ஏனென்றால் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர வழிசெய்யும் இந்தியா இலங்கை உடன்பாட்டுக்கு கடைத்துள்ள இரண்டாவது தோல்வி ஏற்கனவே வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்து விட்டது.

இப்போது காணி அதிகாரங்களும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தநிலையில் முதலாவது தீர்ப்பையடுத்து இந்தியா எவ்வாறு மௌனமாக இருந்ததோ அது போலவே இப்போதும் இந்தியா மௌனமாக இருந்துவிட முடியாது.

ஏனென்றால் இது இந்தியாவின் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படைகளை ஆட்டம் காண வைத்துள்ள தீர்ப்பு.

13வது திருத்தச்சட்மே தமிழர் பிரச்சினைக்கான உயர்ந்தபட்ச தீர்வாகக் கொண்டாடும் இந்தியாவுக்கு இந்தத் தீர்ப்பு நிச்சயம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.

அதவும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்த கையோடு இது வெளியாகி இருப்பது பெரும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால் தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தலைவலி இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

முக்கிய அதிகாரங்களைக் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கு இலங்கையை அழுத்திப் பிடிக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு உருவாகியுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இலங்கை அரசுக்கு அதிகாரப் பகிர்வை எதிர்க்கும் அடிப்படைவாத சக்திகளுக்கும் சாதகமானதாக இருந்தாலும் இன்னொரு வகையில் இதனை தமிழருக்குச் சாதகமான நிலையையும் உருவாக்கலாம்.

தமிழர் பிரச்சனைக்கான தீர்வு 13வது திருத்தச் சட்டத்துக்கும் அப்பாற்பட்டதொன்றாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை இது வலுப்படுத்தப் போகிறது.

அத்துடன் அதிகாரப் பகிர்வை சட்ட வலுவானதாக்கும் அழுத்தங்களும் அதிகரிக்கலாம்.

கடந்த சில நாட்களுக்குள் நடந்த நிகழ்வுகள் இலங்கைக்கு புதிய தலைவலிகளைக் கொண்டு வருவதற்கான அறிகுறிகளே வெளிப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் இந்தச் சிக்கல்களைச் சமாளிப்பது ஒன்றும் இலகுவான விடயமாக இருக்காது.

ஏனென்றால் இவையனைத்தும் உள்நாட்டு எல்லைகளுக்குள் முடக்கிவிடக் கூடிய பிரச்சினைகள் அல்ல. வெளிநாடுகளின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ள பிரச்சினைகள்.

சுபத்ரா

tags ; srilanka,un,tamil,navaneetham pillai sri lanka

No comments:

Powered by Blogger.