அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அக்காவுக்கு —
என் வயது, 30; என் எதிர் வீட்டில் குடியிருக்கும் அவருக்கு வயது, 40. எங்கள் இருவருக்குமே திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். நாங்கள், 12 வருடமாக எதிர் எதிர் வீட்டில் வசிக்கிறோம். எங்களுக்குள் எந்த விதமான பழக்கமும் இல்லை. சென்ற இரண்டு வருடத்திற்கு முன், ஒருநாள், ஜன்னல் வழியாக என்னை பார்த்து சிரித்தார். அதன்பின், அதே போல் இரண்டு அல்லது மூன்று முறை நடந்திருக்கும்.
அதன் பின், எனக்கும் அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. தினமும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். சில சமயம், அவர், என்னை பத்து நாள் கூட பார்க்காமல் இருப்பார். என்னால் ஒருநாள் கூட அவரைப் பார்க்காமல் இருக்க முடியாது; துடித்துப் போய் விடுவேன்.
இதுவரையில், பார்வையால் மட்டுமே பேசிக் கொண்டோமே ஒழிய, எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனாலும், என்னால் அவரை மறக்க முடியவில்லை. அவரை மறக்க வேண்டும் என்பதற்காகவே யோகா செய்கிறேன். இருந்தாலும், தூங்கி எழுந்தவுடன் அவர் முகம் தான், நினைவிற்கு வருகிறது.
இவர் ஞாபகமாகவே இருப்பதால், என்னால், யாரிடமும் அன்பாக இருக்க முடியவில்லை. ஆனால், அவர் மிக இயல்பாகவே நடந்து கொள்கிறார். என்னால் தான் அப்படி இருக்க முடியவில்லை. தயவு செய்து, எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.
அன்புடன்
— உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
திருமணம் முடிந்து, வாழ்க்கையில் நல்ல நிலையில் இருந்த போதிலும், உனக்கு எதிர் வீட்டு ஆணின் மேல் காதல். அவரை மறக்க முடியவில்லை என்று புலம்புகிறாய்.
உன் எதிர்வீட்டு ஆணிடம், உனக்கு பிடித்த நபரின் சாயலை, அணுகுமுறையை கவனித்து, அதனால், நீ மகிழ்ச்சியடைந்திருக்கலாம். இதில், 'உடல் உறவு, செக்ஸ்' போன்ற விஷயங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
'எந்த தவறும் செய்யவில்லை... ஆனாலும், அவரை மறக்க முடியவில்லை...' என்று, ஆதங்கப்பட்டு எழுதியிருக்கிறாய்.
நன்றாக காற்று அடித்த பந்தை எவ்வளவு தான் நீருக்குள் அமுக்கினாலும், அது வெளியே வரத் தானே செய்யும். நீ எவ்வளவு அழுத்தம் கொடுத்து அமுக்குகிறாயோ அதே அளவு, அதிக சக்தியுடன் வெளியே நீரை கிழித்துக் கொண்டுதான் வரும். பிரச்னையின் அடிப்படைக் காரணத்தை கண்டுபிடிக்கும் வரை, மீண்டும் மீண்டும் உனக்கு தொல்லை தரத்தான் செய்யும்.
'அவர் மிகவும் இயல்பாக இருக்கிறார்... அவர் நினைவால் இருக்கும் எனக்குத்தான் யாரிடமும் அன்பாக இருக்க முடியவில்லை...' என்று கூறியிருக்கிறாய். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நீ மாத்திரம் ஒருதலைப் பட்சமாக அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறாய். எனவே, இதை, பிரச்னை என்று நினைப்பதும், நினைக்காமல் இருப்பதும் உன் கையில் தான் இருக்கிறது.
'நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள்' என்று, மனிதர்களுக்கு ஏசு பிரான் கூறுகிறார். நீ, தனியாக அமர்ந்து, உன் எண்ணம் சரிதானா... பக்கத்து வீட்டு ஆணின் பார்வைக்கு நீ ஏங்குவதைப் போல், உன் கணவன், அடுத்த வீட்டுப் பெண்ணின் பார்வைக்கு ஏங்கி, குடும்ப கடமையை மறந்து தவித்துக் கொண்டிருந்தால், உன் மன நிலை எப்படியிருக்கும் என்பதை, உனக்கு நீயே சுயபரிசோதனை செய்.
நடைமுறைக்கு ஒத்து வருகிற நினைப்பு, செயல்களை மாத்திரம் வைத்துக் கொண்டு, நடைமுறைக்கு ஒத்து வராத செயல்களை தவிர்க்க முயற்சி செய்.
வாழ்வியல் நீதி கருத்துள்ள புத்தகங்களை படி; நீ படித்ததில் உள்ள நல்ல விஷயங்களை பிள்ளைகளிடமும், கணவனிடமும் பகிர்ந்து கொள்; தமக்கு கிடைத்தது எதுவோ, அதை வைத்து திருப்தி கொள்ளவும், அதில் சந்தோஷம் காணத் தெரிந்தவர்களே வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவர்கள். நீ, உனக்கு கிடைத்த வாழ்க்கையை, உனக்கு மட்டுமே சொந்தமான உறவுகளை நேசி; விட்டுக் கொடு; அதில் சந்தோஷம் கொள். அதை விடுத்து, பக்கத்து வீட்டு ஆணின் பார்வையை நினைத்து, பாயைப் பிராண்டி, உன் வாழ்வை நீயே கெடுத்துக் கொள்ளாதே...
ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது... தாங்க முடியவில்லை என்று நினைக்கும் பட்சத்தில் திறமையான உளவியல் நிபுணர்களையோ, மனநல மருத்துவரையோ சந்திக்கலாம். அவர்கள் 'ஹிப்னாசிஸ்' அல்லது 'பிகேவியர் தெரபி' போன்ற நவீன சைக்கோ சிகிச்சை முறைகள் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு தரலாம்.
எஞ்சியிருக்கும் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கவும், ஆடிக் காற்றில் அம்மி பறப்பது போல உன் அனைத்துப் பிரச்னைகளும் பறந்து, நிம்மதியான வாழ்க்கை மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.
No comments: