Header Ads

முள்ளிவாய்க்கால் முற்ற சுற்றுச்சுவரை கட்டித்தருமாறு அண்ணா மேம்பாலத்தை பூட்டி மாணவர்கள் போராட்டம்!

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவரை தமிழக அரசு கட்டித்தரக் கோரி சென்னை ஜெமினி மேம்பாலத்தை மறித்து மாணவர்கள் பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டது. இந்த நினைவு முற்ற திறப்புவிழா கடந்த சிலவாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் விழாக்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி முற்றத்தின் சுற்றுச் சுவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக கூறி இடிக்கப்பட்டது. இது தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பகுதியை தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகவும், திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.

செம்மொழிப் பூங்காவுக்கு அருகில் காலை 8 மணி முதலே திரண்டிருந்த மாணவர்கள் திடீரென ஜெமினி மேம்பாலத்தை மறித்து பூட்டுப் போடும் போராட்டத்தினை நடத்தினர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை தேனாம்பேட்டையில் உள்ள மங்களம் மஹால் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.