Header Ads

சென்னை குண்டு வெடிப்பு: தீவிரவாதிகள் 2 பேர் அடையாளம் தெரிந்தது

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 குண்டுகள் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. குண்டு வெடிப்பில் ஆந்திராவை சேர்ந்த இளம் பெண் சுவாதி பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

தமிழகத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா, ஐ.ஜி. மகேஸ்குமார் அகர்வால் ஆகியோரது மேற்பார்வையில், 12 தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

சென்ட்ரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பில் துப்பு துலக்குவதற்காக போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையிலான போலீசார் பெங்களூரில் முகாமிட்டு கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரெயில் நிலையங்களில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தினர். குறிப்பாக குண்டு வெடிப்பு நடைபெற்ற கடந்த 1–ந்தேதி அன்று சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கேமராக்களில் பதிவான அத்தனை காட்சிகளும் ஆழமாக அலசப்பட்டன.

அப்போது கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டிருந்த 9–ம் நம்பர் நடைமேடையில் வழுக்கைத் தலை ஆசாமி ஒருவர் ஓடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. குண்டு வெடித்த எஸ்–4 பெட்டிக்கு முந்தைய பெட்டியான எஸ்–3–ல் இருந்து இறங்கி அவர் வேக வேகமாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறுகிறார். இதனால் அவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு அவரது வீடியோ காட்சிகளை சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. மகேஸ்குமார் அகர்வால் வெளியிட்டார். கேமராவில் சிக்கியுள்ள மர்ம நபரை பற்றி தெரிந்தவர்கள் 044–22502510, 044–22502500 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே குண்டு வெடிப்பு சம்பவத்தில் அதிரடி திருப்பமாக தீவிரவாதிகள் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:–

பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுகள் வெடித்த பெட்டிகளில் (எஸ்–4–ல் இருக்கை எண்.70, எஸ்–5–ல் இருக்கை எண்.28) 2 பேர் மர்மமான முறையில் தட்கல் டிக்கெட் எடுத்து பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

70-ம் எண் இருக்கை அகமது உசேன் என்பவரின் பெயரிலும், 28–ம் எண் இருக்கை ஜான்சன் என்பவரின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 டிக்கெட்டுகளும் தட்கலில் எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் ரெயில் நிலையத்தில் கடந்த 29–ந்தேதி அன்று, காலை 10.07 மணிக்கு தட்கலில் 2 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகமது உசேன் என்ற பெயரில் மேற்கு வங்காள மாநிலம் மால்டா வரை செல்வதற்கும், ஜான்சன் பெயரில் கவுகாத்தி வரை செல்வதற்கும் போலியான ஆவணங்களை கொடுத்து தட்கல் டிக்கெட்டை எடுத்துள்ளனர்.

ஜான்சன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் போன் நம்பர் எதுவும் இல்லை.

அகமது உசேன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் செல்போன் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போன் நம்பரை போலீசார் ஆய்வு செய்தனர். கடந்த ஒரு மாதமாக அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது.

2 பேரும் கொடுத்துள்ள முகவரிகளும் போலியானவை என்று தெரியவந்துள்ளது. எனவே இவர்கள் 2 பேரும் சேர்ந்துதான் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு குண்டுகளை வெடிக்கச் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அகமது உசேன், ஜான்சன் ஆகிய 2 பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்த இருவரும் பெங்களூரில் ரெயிலில் ஏறி குண்டுகளை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் பயணிகளோடு அமர்ந்து அவர்கள் பயணம் செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

தீவிரவாதிகள் இருவரும் பல மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு வந்து குண்டு வெடிப்பு சதிதிட்டத்தை தீட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 2 பேரில் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மறுநாள் காலையில் 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் 6.40–க்கு இங்கிருந்து புறப்பட்டு அசாம் மாநிலம் கவுகாத்திக்கு ரெயில் செல்லும்.

குண்டு வெடித்த நேரத்தில் (காலை 7.15 மணிக்கு) ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியை ரெயில் சென்றடைந்திருக்கும். சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக வந்ததால்தான், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. சரியான நேரத்துக்கு ரெயிலின் பயணம் அமைந்திருந்தால், ஆந்திர எல்லைப் பகுதியிலேயே குண்டுகள் வெடித்திருக்கும்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த மே 1–ந்தேதி அன்று பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, ஆந்திர மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். எனவே அவரது பிரசார பயணத்தை சீர் குலைக்கும் நோக்கில் இது மோடிக்கு வைத்த குறியா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் 2 பேரும் பெங்களூரில் இருந்து கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்ட பின்னர், எங்கு இறங்கினார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கி ஓடும் வழுக்கைதலை ஆசாமி சதிகாரர்களில் ஒருவனா? என்பது பற்றியும், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெங்களூரில் இருந்து சென்னை வரும் வழியில் பல ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படாமல் உள்ளது. இந்த ரெயில் நிலையங்களை கண்காணித்து தீவிரவாதிகள் அங்கு இறங்கி தப்பித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த கடந்த 29–ந்தேதி அன்று பெங்களூர் ரெயில் நிலைய கேமராக்களில் பதிவான காட்சிகளில் சதிகாரர்கள் இருவரும் இருக்கிறார்களா? என்றும் ஆராயப்படுகிறது.

இந்த 2 பேரும் யார்? என்பது பற்றி துப்பு துலக்குவதற்காக காயம் அடைந்த பயணிகளிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் கம்ப்யூட்டரில் 2 பேரின் படத்தையும் போலீசார் வரைந்து வருகிறார்கள். சரியான முறையில் துப்பு எதுவும் கிடைக்காத பட்சத்தில் இந்த கம்ப்யூட்டர் படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.