பல கோடி சொத்துகளை இழந்தார் சொந்த வீட்டை விட்டு நடிகர் கார்த்திக் வெளியேறினார்
சென்னை : தமிழ்ப் படவுலகில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் கார்த்திக். மறைந்த பிரபல நடிகர் முத்துராமனின் மகன். இவர், ‘சோலைக்குயில்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ராகினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள். அதில் ஒருவரான கவுதம் கார்த்திக், ‘கடல்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் நடித்தார். தற்போது ‘வை ராஜா வை’, ‘சிப்பாய்’, ‘இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக்கும் ‘அனேகன்’ உட்பட ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.சென்னை ஆழ்வார்பேட்டையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள முத்துராமனின் வீடுகள் மற்றும் வணிக வளாகம் இருக்கிறது. முத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் வசித்து வந்தார். அங்குதான் முத்துராமனின் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தனர்.சமீபகாலமாக கார்த்திக் குடும்பத்தினரிடையே சொத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கார்த்திக், அந்த வீட்டை விட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிகிறது. ‘சொத்துகளில் எனக்கும் பங்கு இருக்கிறது. நான் ஏன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்?’ என்று அவர்களிடம் கார்த்திக் விவாதித்ததாகவும், இதையடுத்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது கார்த்திக்கிடம், சொத்துகள் பற்றிய விவரங்கள் காட்டப்பட்டதாம். அதில் அவரது பெயர் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வருத்தமடைந்து, அவர்களிடம் சண்டை போட்டாராம். அப்போது சொத்துகளில் தனக்கும் பங்கு உண்டு என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த வீட்டை விட்டு அவர் வெளியேற்றப்பட்டதாகவும், சொந்தங்களால் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களிடம் கார்த்திக் கூறியதாக தெரிகிறது.இதுகுறித்து கார்த்திக் தரப்பில் தொடர்புகொண்டபோது, உரிய பதில் கிடைக்கவில்லை. அவரது மகனும், நடிகருமான கவுதம் கார்த்திக் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை.இதையடுத்து திரையுலகில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு: முத்துராமன், சுலோசனா தம்பதியருக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். முத்துராமன் திடீரென்று மரணம் அடைந்த பிறகு அவரது சொத்துகள் முழுவதும் சுலோசனா வசம் இருந்தது.
இந்நிலையில், சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட தகராறு காரணமாக கார்த்திக் உரிமை கோரியபோது, உயிலில் அவரது பெயர் இல்லை என்ற உண்மை தெரிந்திருக்கிறது. இதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, பல வருடங்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல் தன் பெயரில் எழுதி வைத்துக்கொண்டவர் பற்றி அறிந்த கார்த்திக், அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சினிமாவில் நடித்து சம்பாதித்துக் கொள்வதாக நெருங்கிய நண்பர்களிடம் சொன்ன கார்த்திக், வீட்டை விட்டு அவராகவே வெளியேறி விட்டாராம்.இந்த விவகாரம் குறித்து இதுவரை கார்த்திக் பேட்டி அளிக்கவில்லை. மேலும், அவரது தரப்பில் இருந்து அறிக்கையும் அனுப்பவில்லை. மேலும், கார்த்திக்கின் மூத்த சகோதரர் என்று சொல்லப்படுபவரும் இந்த விஷயம் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.கார்த்திக் ஏமாற்றப்பட்ட விவகாரம், தமிழ்த் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments: