ஜிகர்தண்டா - சினிமா விமர்சனம்
ஜிகர்தண்டா’ போலவே, ஜிலீர் மதுர சினிமா!
குறும்பட இயக்குநர் சித்தார்த்துக்கு, ரத்தம் தெறிக்கும் கேங்ஸ்டர் கதை பிடித்தால் ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். மதுரையை ஆட்டிப்படைக்கும் 'அசால்ட்’ சேதுவை கேஸ் ஸ்டடி செய்து, கதை பிடிக்க மதுரை வருகிறார். மதுரையின் டிரேட்மார்க்கான 'சத்தம்... ரத்தம்’ கதைதான். ஆனால், அதில் 'ரௌடி வாழ்க்கையில் சினிமா’ என்று வித்தியாச ரூட் பிடித்து ஜாலி ரெய்டு அடித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
பேசியே கொல்லும் சங்கிலிமுருகன், 'டிரிபிள் எக்ஸ்’ ஆதர்ச அடியாள், கறுப்பு ஆட்டைக் கண்டுபிடிக்கும் தாதா வியூகம், தண்ணி இல்லா கிணற்றுக்குள் தண்ணி பார்ட்டி, புடைவை திருடும் ஹீரோயின், நடிப்பு வராவிட்டால் கொடுக்கப்படும் 'கில் அண்ட் லாஃப்’ தண்டனை... என உள்ளே சில பல ஆச்சர்யங்கள்!
ஜிகர்தண்டாவுக்கு கடல்பாசி, இந்தப் படத்துக்கு சிம்ஹா. ப்பா... என்னா உதார்... என்னா கெத்து! 'என்னைப் பத்தி அவ்ளோ எழுதிட்டு பொம்மைப் படமா போடுற?’ என நிருபரை எரிப்பது, 'ஒரு உசுர எடுத்துட்டுத்தான் உள்ள வர்றோம். இன்னொரு உசுர குடுத்தாத்தான் வெளிய போக முடியும்’ என பிலாசஃபி பேசுவது என முதல் பாதி முழுக்க ரணகளம். அதே இடைவேளைக்குப் பின், 'நான் சங்கர்-கணேஷ் ரசிகன்’ என இறுக்கமாக முறைக்கும் இடங்களில்... அதகளம்!
'ஆசையும் காசும் இருக்கிறவன் எல்லாம் நுழையுறதுக்கு, சினிமா என்ன அயிட்டம் வீடா?’ எனப் பொங்கி இயலாமையையும் கோபத்தையும் ஒருசேரக் கடத்தும் சித்தார்த், சிம்ஹாவுக்கு ஸ்பேஸ் கொடுத்து அடக்கியே வாசிக்கிறார். புடைவை திருடுவது, சித்தார்த்தைச் சிக்கவைப்பது... என, கொஞ்சம் நெகட்டிவ் ரோல் லட்சுமிமேனனுக்கு. அவ்வப்போது முகம் காட்டும் அவருக்கும் சித்தார்த்துக்குமான காதலில் எந்த உயிர்ப்பும் இல்லை.
அத்தனை பெரிய சம்பவத்துக்குப் பிறகு சிம்ஹா அலட்டிக்கொள்ளாமல் கழிவறைக்குச் செல்வது, போலீஸ் வந்ததும் வீட்டுக்குள்ளேயே பிணத்தை மறைப்பது, 'நான் ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தேன்.. அது மாதிரி செய்’ என்று துப்பாக்கியில் ஒரே ஒரு புல்லட் போட்டு மிரட்டுவது, கேமரா பேட்டரியை சார்ஜ் ஏற்றிக்கொண்டு அடிதடியைத் தொடர்வது... என ரணகள ரௌத்திரங்களுக்கு இடையிலும் செமத்தியாகக் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.
எல்லாம் சரி... ஆனால், முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் சம்பந்தமே இல்லாமல் வெவ்வெறு ட்ரீட்மென்ட்டில் பயணிக்கிறதே படம். ஒரே கட்டணம், இரண்டு சினிமா பார்த்த ஃபீல் பிரதர். 'அ.குமார்’ சினிமாவில் அப்படி என்ன ஹ்யூமர் இருக்கிறது என்று கொண்டாடுகிறார்கள்? இரண்டாம் பாதியில் சித்தார்த்தின் சினிமா கேரியர் என்ன ஆனது என்று டென்ஷன் எகிற வேண்டுமே? ப்ச்! வெட்டு, குத்து என ரத்தம் தெறிக்கும் சினிமாவில் 'நல்லது எங்கே?’ என்று தேடிப் பார்த்தால்... நஹிஜி.
விசில் இசை வைத்தே டெரர் பின்னணி கொடுப்பதிலும், 'கண்ணம்மா கண்ணம்மா...’, 'பாண்டி நாட்டு...’ பாடல்களிலும் விளையாடுகிறார் சந்தோஷ் நாராயணன். கேவ்மிக் யுஆரியின் ஒளிப்பதிவு... இருளிலும் இடுக்கிலும்கூட கேண்டிட் தத்ரூபம்!
'ஜிகர்தண்டா’வில் 'தண்டா’ என்றால் கோல்டு என்றார்கள் டீஸரில். இது கொஞ்சம் ஜாலியான ஐஸ் கோல்டு காபி!
No comments: