இலங்கையில் தமிழர்கள் மீது 'என்கவுன்டர்': தனுஷ்கோடியில் அகதிகள் கண்ணீர் பேட்டி
ராமேஸ்வரம் : இலங்கை ராணுவம், தமிழர்களை விரட்டிப் பிடித்து, 'என்கவுன்டர்' செய்து வருவதால், இனி, அங்கு வாழ முடியாது' என, தனுஷ்கோடிக்கு தப்பி வந்த அகதிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
கடந்த, 2009ல், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின், தமிழர்கள் முள்வேலி சிறையில் அடைக்கப்பட்டனர். சர்வதேச நாடுகள் வலியுறுத்தியதால், தமிழர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்று திரண்டு, அரசியல் கட்சி, தொண்டு அமைப்புகள் உருவாக்குவதாக இலங்கை அரசு கூறி வந்தது.இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணம், முல்லைத் தீவைச் சேர்ந்த, தயாபரராஜ், 34, அவரது மனைவி உதயகலா, 32, அவர்களது குழந்தைகள் மூவர் மற்றும் தவேந்திரன், 35, ஒரு படகிலும்; கணேஷ் சுதாகர், 33, அவரது மனைவி ராமக்கா, 30, குழந்தைகள் இருவர், மற்றொரு படகிலும் ஏறி, தனுஷ்கோடி அருகில் உள்ள அரிச்சல்முனை கடற்கரையில் இறங்கினர்.
இதுகுறித்து, உதயகலா கூறியதாவது: போர் நிறுத்தத்திற்கு பின், முல்லைத் தீவு ராணுவ முகாமில் எங்களை அடைத்தனர். நீண்ட நாட்களுக்குப் பின் விடுவித்தனர். வேலை தேடி பல ஊர்களுக்கு சென்றோம். இறுதியாக, கண்டியில் தங்கினோம். அங்கும், இலங்கை ராணுவத்தினர், எங்களை இருக்க விடவில்லை.விடுதலைப் புலிகள் போர்வையில், தமிழர்கள் ஊடுருவி இருப்பதாக கூறிய ராணுவத்தினர், அப்பாவி சிறுவர்கள், இளைஞர்களை தேடிப் பிடித்து கொலை செய்தனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், 1,000க்கும் மேலான தமிழர்களை கைது செய்து, வெலிக்கடை சிறையில் அடைத்துள்ளனர்.கடந்த, 1985ல், இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் போன்று, தற்போது, ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலரை காணவில்லை. இனி தமிழர்கள், அங்கு வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.குழந்தைகள் படிப்பிற்காக, இலங்கை ராணுவத்திற்கு தெரியாமல், அகதியாக தமிழகத்திற்கு வந்துள்ளோம். இந்திய அரசு, எங்களை சிறையில் அடைக்காமல், முகாமில் தங்க வைக்க வேண்டும்.இவ்வாறு, கண்ணீர் மல்க கூறினார்.
தவேந்திரன் கூறியதாவது: இலங்கையில் நடந்த மாகாண தேர்தலுக்கு பின், ராணுவம், உளவுத்துறையினர், நிம்மதியாக வாழும் தமிழர்களை விரட்டிப் பிடித்து, 'என்கவுன்டர்' செய்து வருகின்றனர்.இதனால், வீடுகளில், இளைஞர்கள், இளம்பெண்கள் தங்க முடியாமல், காடுகளில் தலைமறைவாக வாழ்கின்றனர். என் உயிரைக் காப்பாற்ற, மனைவி குழந்தையை வவுனியாவில் விட்டுவிட்டு, தமிழகம் வந்துள்ளேன். இலங்கை அரசின் கெடுபிடிக்கு பயந்து, 5,000 தமிழர்கள் அகதிகளாக, தமிழகத்திற்கு வர காத்திருக்கின்றனர் என, வேதனையுடன் தெரிவித்தார்.
உறவில் பாதிப்பு ஏற்படுமா?
இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் கண்டன தீர்மானம் நிறைவேறியதால், ஆத்திரமடைந்த இலங்கை அரசு, தமிழர்களை தேடிப் பிடித்து கொலை செய்துள்ளது. 1,000க்கும் மேற்பட்டவர்களை சிறையில் அடைத்துள்ளது.இதன் மூலம், விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகி வருவதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், ஐ.நா.,விடம் காட்டி தப்பிக்க முயற்சி செய்கிறது என, தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை தமிழர்கள் தெரிவித்தனர்.இதுவரை, இலங்கை அகதிகளை, மாநில, 'கியூ' பிரிவு, மத்திய புலனாய்வு (ஐ.பி.,) போலீசார் மட்டுமே விசாரித்து வந்தனர். நேற்று, தனுஷ்கோடி வந்த அகதிகளை, மத்திய அரசின் முக்கிய உளவு அமைப்பான, 'ரா' அதிகாரிகளும் விசாரித்தனர்.இலங்கையில் தற்போது நடக்கும் கொடூரங்கள், இந்தியா இலங்கை உறவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என, உளவுத் துறையினர் கூறுகின்றனர்.ஏனெனில், இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வுக்காக, பல ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி உள்ளது.

No comments: