124 இன்னிங்சில் 19வது சதம் : கிறிஸ் கேல் சாதனையை தகர்த்தார் கோஹ்லி
ஆசிய கோப்பை தொடரில், வங்கதேச அணியுடனான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி சதம் விளாசி வெற்றியை வசப்படுத்த உதவினார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 19வது சதம். இந்த மைல் கல்லை அதிவிரைவாக எட்டிய வீரர் என்ற வகையில், புதிய உலக சாதனையும் அவரது வசமாகி உள்ளது. வெஸ்ட் இண்டீசின் அதிரடி ஆல் ரவுண்டர் கிறிஸ் கேல் 189 இன்னிங்சில் 19 சதம் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. கோஹ்லி தனது 124வது இன்னிங்சிலேயே அதை முறியடித்துள்ளார். சச்சின் 194 இன்னிங்சிலும், கங்குலி 197 இன்னிங்சிலும் இதை எட்டியுள்ளனர்.
*ஆசிய கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய கேப்டன் என்ற பெருமையும் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. 122 பந்தில் 136 ரன் விளாசிய அவர், முன்னதாக தாக்காவில் 2000, மே 30ல் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த போட்டியில் சவுரவ் கங்குலி ஆட்டமிழக்காமல் 135 ரன் எடுத்த சாதனையை தகர்த்தார்.
*இந்தியா , வங்கதேச அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் போட்டிகளில் 3 சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கே. கம்பீர் 2 சதம் அடித்துள்ளார்.
*இலக்கை வெற்றிகரமாகத் துரத்திய 47 இன்னிங்சில் இது அவரது 12வது சதமாகும். இந்த வகையில் சச்சின் 124 வெற்றிகரமான சேசிங்கில் 14 சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
*ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி 18வது முறையாக ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.
No comments: