பணிப்பெண்ணிடம் சில்மிஷம்: விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட நடிகர்கள்
கொச்சியில் பணிப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் நடிகர்கள் கிரிக்கெட் குழு விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியின்(சி.சி.எல். கிரிக்கெட் போட்டி) முதல் அரையிறுதி ஆட்டம் ஐதராபாத்தில் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் நடிகர் மோகன்லால், நடிகை லிசி ஆகியோரை உரிமையாளர்களாக கொண்ட கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியும், போஜ்புரி தபங்கா அணியும் மோதுகின்றன.
இதற்காக கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியைச் சேர்ந்த 30 பேர் நேற்று பகல் கொச்சியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டனர்.
விமானம் கிளம்ப தயாரான போது, அதில் இருந்த நடிகர்கள் குழுவைச் சேர்ந்த சிலர் விமான சிப்பந்தி ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிப்பந்தி விமானியிடம் புகார் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அந்த கிரிக்கெட் குழுவினர் அனைவரையும் விமானத்தில் இருந்து இறக்கி விட்டால்தான் விமானத்தை கிளப்புவேன் என்று விமானி கூறியுள்ளார்.
இதற்கு நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பாதுகாப்பு ஊழியர்கள், நடிகர் பினீஷ் கொடியேறி, எடவெலா பாபு உள்ளிட்ட நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் 30 பேரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர். அவர்களுடைய பெட்டிகளும் (லக்கேஜ்) கீழே இறக்கப்பட்டன.
இதனால் பகல் 1 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக 2.33 மணிக்கு கொச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது.
இது தொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இறக்கி விடப்பட்ட பயணிகள் அடுத்த விமானத்தில் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தங்கள் குழுவினரை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டது தவறு எனவும் நடிகர் எடவெலா பாபு நெடும்பஞ்சேரி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் பொலிசில் புகார் அளித்துள்ளது.
No comments: