தென் சென்னையில் நடிகை குஷ்பு போட்டியா?
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.
தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல், இன்று 5–வது நாளாக நடைபெறுகிறது. இது வரை நேர்காணல் நடைபெற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி வருகின்றன.
கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தவிர இளைஞர் அணியிருக்கே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று கூறப்படுகிறது. பிரபலமானவர்களும் தி.மு.க. வேட்பாளர்களாக களம் இறக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரமாக உள்ளது. 2004–ம் ஆண்டு தேர்தலில் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியை தி.மு.க. இழந்தது. அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த முறை எப்படியாவது இங்கு வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
தென் சென்னை தொகுதியில் பிரபலமான வேட்பாளரை நிறுத்தினால் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனவே நடிகை குஷ்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டால் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு சரியான போட்டியாக அமையும்.
எனவே தென் சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளராக குஷ்பு நிறுத்தப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டது. தி.மு.க. மாநாட்டில் குஷ்புவுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே அவருக்கு தென் சென்னை தொகுதி உறுதி என்று தி.மு.க.வினரே பேசிக் கொண்டனர்.
தென் சென்னை தொகுதியில் முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் இல.கணேசன் இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் சார்பிலும் முக்கிய தலைவர் ஒருவர் இந்த தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. சார்பில் குஷ்பு போட்டியிடுவாரா என்பது குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, வேட்பாளர் நேர்காணல் இன்னும் முடியவில்லை. தென் சென்னையில் பலமான வேட்பாளர் ஒருவரை நிறுத்த கட்சி மேலிடம் விரும்புகிறது. அது யார் என்பதை தலைவர் அறிவிப்பார் என்றார்.
No comments: