இலங்கையில் இசை நிகழ்ச்சி ரத்து: வைகோவுக்கு தமிழர்கள் நன்றி
ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் நியாயம் கிடைக்க தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் நீதிக்கான முழக்கம் எழுந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிங்கள ராஜபக்சே அரசு வஞ்சகமான வேலையைச் செய்கிறது.
கோத்தபய ராஜபக்சே கூட்டம் பின்னணியில் செய்திருக்கிற ஏற்பாட்டில் இலங்கையில் இசை நிகழ்ச்சி என்ற பெயரில் உலக நாடுகளை ஏமாற்றும் வேலைக்கு ஏற்பாடாகி இருந்தது. ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப் பதற்காக தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்த ஏற்பாடாகி இருந்தது.
விஜய் தொலைக்காட்சி இசைக் குழுவினரும், இலங்கைக் கலைப்படைப் பினரும் இணைந்து இந்த இசைவிழாவை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 1–ந்தேதி கொழும்பு மருதாணை, புனித வளனார் கல்லூரியிலும், மார்ச் 2-ஆம் தேதி பம்பலப்பட்டி கதிரேசன் மண்டபத்திலும் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலுள்ள விஜய் தொலைக்காட்சியில் பாடல் இசைக்கும் கலைஞர்கள் நேற்றே இலங்கை தலைநகர் கொழும்பு சென்றனர்.
இந்த தகவலை அறிந்த வைகோ ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்து தான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கொழும்பில் இருந்து வெளி வருகின்ற வீரகேசரி மற்றும் தினக்குரல் ஆகிய செய்தி தாள்களில் இச்செய்தி வந்துள்ளது. இதையறிந்த உலகத் தமிழர்கள் தொலை பேசியில் வைகோவை அழைத்து தங்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments: