தயாரிப்பாளர் சங்க விவகாரம்: தாணு நடத்தும் பொதுக்குழுவுக்கு ஐகோர்ட் தடை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக பொதுக்குழு கூட்டம் நடத்த ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எனது தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதை எதிர்த்து தாணு, 8 வழக்குகள் தொடர்ந்தார். எனது தலைமையிலான நிர்வாகிகள் செயல்பட தடை விதிக்கக் கோரிய அவரது மனுக்களை, 19.2.2014 அன்று ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதிலிருந்து நாங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு முழு அதிகாரம் கிடைத்தது.
இந்த சூழ்நிலையில், ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தாணு தரப்பினர் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறிய நீதிபதிகள் பால் வசந்தகுமார், தேவதாஸ் ஆகியோர், மனுவை இன்று தள்ளுபடி செய்தனர்.
இதனிடையே, வரும் 2ம் தேதி சங்கத்தின் முன்னாள பொருளாளர் தாணுவும், இந்நாள் பொருளாளர் ஆர்.ராதாகிருஷ்ணனும் இணைந்து விஜயா பார்க் ஓட்டலில் பொதுக்குழுவை நடத்தப்போவதாக கூறியுள்ளனர். அதில், கே.ஆர். மீதும் அவர்களது நிர்வாகிகள் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தீர்மானித்துள்ளனர்.
எனவே, சட்டவிரோதமான இந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று நாங்கள் இன்று வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதியரசர் ராமநாதன், அவர்கள் பொதுக்குழுவை நடத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஏப்ரல் 7ம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தாமே முன்வந்து பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
அதன்படி விரைவில் பொதுக்குழுவை கூட்ட உள்ளோம். அதில், சிறு முதலீட்டு படங்களை சாட்டிலைட் உரிமம் வாங்காத சேனல்களுக்கு வழங்க ஒத்துழைக்க மாட்டோம், அனைத்து படங்களுக்கும் விளம்பர கட்டுப்பாடு மற்றும் படவெளியீட்டை முறைப்படுத்துவது, வெளிவர முடியாமல் இருக்கும் படங்களை வெளியிட விநியோகஸ்தர்களின் ஒத்துழைப்புடன் உதவி செய்வது மற்றும் பல நலத்திட்டங்கள் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் சிவா, ஞானவேல்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
No comments: