காதல் விவகாரமா? நடுரோட்டில் 2 வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
சென்னை : திருவொற்றியூரை சேர்ந்தவர் மோகன் (26). தனியார் நிறுவன ஊழியர். இவர், காசிமேட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அவரது நடவடிக்கை பிடிக்காததால் மோகன் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மோகன் வேலை முடிந்து, தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெரு வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த 3 பேர், அவரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தலை மற்றும் முகத்தில் வெட்டினர்.இதில், மோகன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனே 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.தகவலறிந்து, தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மோகனை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பேச மறுத்ததால் காதலி ஆட்களை ஏவி தன்னை தாக்கி இருக்கலாம் என மோகன் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலியை பிடித்து விசாரிக்கின்றனர். மேலும், தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: வில்லிவாக்கம் பாரதி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (19). அலங்கார விளக்கு அமைக்கும் வேலை செய்கிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு, வில்லிவாக்கம் நாதமுனி சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மர்ம நபர்கள் சரவணனை வழிமறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.ரத்த வெள்ளத்தில் துடித்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்படி, வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில் போட்டி காரணமாக சரவணன் தாக்கப்பட்டாரா அல்லது காதல் விவகாரமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments: