Header Ads

பேரவையில் கடும் வாக்குவாதம் குற்றங்கள் நடைபெறாத நாடே கிடையாது

சென்னை : குற்றங்கள் நடைபெறாத நாடே கிடையாது என்று தேமுதிக உறுப்பினர் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். சட்டப்பேரவையில் நேற்று 2014-2015ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்கள் பேசியதாவது:மோகன்ராஜ் (தேமுதிக, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்): தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்: மணல் விலை மற்றும் விற்பனை கட்டுப்பாட்டில் உள்ளது. கரூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில்தான் மணல் கிடைக்கிறது. இதனால் தட்டுபாடின்றி மணல் கிடைக்க அனைத்து மாவட்டங்களில் ஸ்டாக் யார்டு திறக்கப்பட்டுள்ளது. மோகன்ராஜ்: தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. அதற்கு மின்வெட்டு ஒரு காரணம். நில வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரத்தில் அதிக அளவு கொலைகள் நடக்கிறது.

ஒ.பன்னீர்செல்வம்: இந்தியாவில் தமிழகத்தில்தான் குற்றங்கள் குறைவு என்று புள்ளி விவரத்தோடு கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் ஜெயலலிதா எடுத்துரைத்தார். நீங்கள் அவையில் இல்லை என்று நினைக்கிறேன். மோகன்ராஜ்: முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன். குற்றச்சாட்டாக கூறவில்லை. செங்கல்பட்டில் கடந்த சில மாதத்தில் மட்டும் 30 கொலைகள் நடந்துள்ளது. அதில் 16 அரசியல் கொலைகள் ஆகும். உங்கள் கட்சி, எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா: இந்த ஊரில் அவ்வளவு கொலைகள், அந்த ஊரில் இவ்வளவு கொள்ளைகள் என்று குற்றச்சாட்டு கூறி, நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று உறுப்பினர் கூறுகிறார். குற்றங்கள் நடக்காத நாடே கிடையாது. ஊரே கிடையாது. குற்றங்கள் விகிதம் குறைந்துள்ளதா என்றுதான் பார்க்க வேண்டும். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு நான் பதில் அளித்து பேசும்போது உறுப்பினர் வரவில்லை. 

இந்த அரசு பதவி ஏற்றபிறகு குற்றங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது என்று விரிவாக எடுத்துச் சொன்னேன். மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களையும் கூறினேன். இதன்பிறகும் குற்றச்சாட்டாக சொன்னால் எந்த அர்த்தமும் இல்லை. அன்றைக்கு பேசிய எனது பதிலுரை அனைத்து உறுப்பினர்கள் மேஜையிலும் வைக்கப்பட்டுள்ளது. அதை படித்து பார்த்தபிறகு பேச வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுத்ததா என்றுதான் பார்க்க வேண்டும். எடுக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கும்.மோகன்ராஜ்: முதல்வரின் பதிலுரையை நேற்றே தந்திருந்தால் படித்து பார்த்து இன்று பதிலுரையில் சொல்லி இருப்பேன்.... (தொடர்ந்து அவர் பேசிய பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.)பேரவைத் தலைவர் தனபால்: ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது.ஜெயலலிதா: நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வாய்மொழியாக கூறக்கூடாது. எழுத்துப்பூர்வமாக சொல்ல வேண்டும்.(அப்போது அதிமுக உறுப்பினர் தரப்பில் இருந்து தேமுதிக உறுப்பினர்களை பார்த்து சிலர் குரல் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்)

அமைச்சர் முனுசாமி: சரியான காரணம் சொல்ல முடியாமல் சத்தம் போட்டுவிட்டு வெளியே செல்ல தேமுதிகவினர் முயற்சிக்கிறார்கள்.பேரவைத் தலைவர்: தேமுதிக உறுப்பினர்கள் கைநீட்டி பேசக்கூடாது. உறுப்பினர் சந்திரகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்.(இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்தனர்)மோகன்ராஜ்: காலியாக உள்ள காவலர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.ஜெயலலிதா: காவல் துறையில் காலி பணியிடங்களை நினைத்த மாத்திரத்தில் உடனே நிரப்ப முடியாது. சில நடைமுறைகள் உள்ளது.  காவல் துறை தேர்வு வாரியம் மூலம் விளம்பரம் செய்து, விண்ணப்பம் பெற்று பல்வேறு சோதனை மற்றும் தேர்வு முடிந்து தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் முடிய ஒன்றரை ஆண்டு ஆகும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் சொல்வதுபோன்று உடனடியாக பணியில் அமர்த்த முடியாது.

மோகன்ராஜ்: சேலம் மாவட்டத்தில் 10, 15 நாளுக்கு ஒருமுறைதான் குடிநீர் கிடைக்கிறது. சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருகம்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்ட பலமுறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர் முனுசாமி: இடம் கிடைக்காததால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இடம் கிடைத்ததும் கட்டப்படும்.மோகன்ராஜ்: தொழில் உற்பத்தி குறைந்துள்ளது.அமைச்சர் தங்கமணி: தொழில் தொடங்க நிலம் கையகப்படுத்த வேண்டும். ஆனால் தேமுதிக எம்எல்ஏ அருண் சுப்பிரமணியம், நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று 1000க்கும் மேற்பட்ட வழக்கு தொடுத்துள்ளார். காகித ஆலை தொடங்க இடம் கொடுக்க கூடாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ போராட்டம் நடத்துகிறார். ஆனாலும், 53 ஆயிரம் ஏக்கர் நிலம் கண்டெடுத்து தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். உங்களை போன்று 1000 பேர் வந்தாலும் முதல்வர் தனி ஆளாக நின்று போராடி தமிழகத்தை சிறந்த தொழில் மாநிலமாக உருவாக்குவார்.இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

சட்டப்பேரவையில் 6 சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றம் 

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகச் சட்டத்திருத்தம், நிலம் கையகப்படுத்தப்படுவதில் நியாயமான இழப்பீடு உள்ளிட்ட ஆறு சட்ட முன்வடிவுகள் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.நிலம் கையகப்படுத்தப்படுவதில் நியாயமான இழப்பீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு உரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான சட்டமுன்வடிவு, 2014-15ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியின்மைத் தடுக்கும்) சட்டத்தை மேலும் திருத்துவதற்கான சட்டமுன்வடிவு, கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான சட்டமுன்வடிவு, 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் நாளில் தொடங்கிய நிதி ஆண்டின் பணிகளுக்காகவும், நோக்கங்களுக்காகவும், மாநிலத் தொகுதி நிதியிலிருந்து மேலும் குறிப்பிட்ட சில தொகையை ஒதுக்க வகை செய்யும் முன்வடிவு ஆகிய 6 சட்ட முன்வடிவுகள் நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது 

மறு தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால்  நேற்று அறிவித்தார்.இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த 13ம் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதன் மீது  கடந்த 17ம் தேதி தொடங்கி நேற்று வரை சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். விவாதத்துக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று பதில் அளித்து பேசினார்.  இதன் பிறகு அவை முன்னவரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை சபையில் முன்மொழிந்தார். தீர்மானம் சபையின் முடிவுக்கு விடப்பட்டது.  குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘‘தீர்மானம் நிறைவேறியது, சபை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது’’ என்று கூறி சபாநாயகர் தனபால் சட்டப்பேரவையை ஒத்திவைத்தார்.

No comments:

Powered by Blogger.