Header Ads

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பாராட்டு

தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், அதனை மத்திய அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:– மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்குமென்று நம்புகிறேன். அவர்களும் ஒப்புதல் அளித்து தூக்குத் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டால் நாம் மேலும் மகிழ்ச்சி அடையலாம்.

கேள்வி:– தமிழக அரசு துரித முடிவு எடுத்திருப்பதாக கருதலாமா?

பதில்:– இது துரித முடிவு அல்ல. 2011ஆம் ஆண்டிலேயே இந்தக் கருத்தினை நான் தெரிவித்த போது அதை ஏற்காமல் ஏகடியம் பேசியவர் தான் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா.

ஆனால் இன்றைக்கு அதே நிலையை அவர் எடுத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.

கேள்வி:– தமிழக அரசே விடுவித்திருக்கலாமே; மத்திய அரசுக்கு அனுப்புவது அவசியமா?

பதில்:– அது பற்றி விரிவாக முன்கூட்டியே யோசித்திருப்பார்களானால், இன்றைக்கே அவர்களை விடுதலை செய்திருக்கலாம். தாமதம் ஏற்படாது. தாமதமாக வந்தாலும் நாம் மகிழ்ச்சியடையக் கூடிய முடிவு ஏற்படுமேயானால் நல்லதுதானே!

கேள்வி:– கால தாமதம் ஏற்பட்டதற்காக, அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறதே?

பதில்:– அதைப்பற்றி யாரும் எங்களிடம் பேசவில்லை. அதனால் நாங்கள் அதுபற்றி சிந்திக்கவில்லை. அப்படியொரு கோரிக்கை வைக்கப்பட்டால் அது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments:

Powered by Blogger.