ஷங்கரின் டவுசர் காலம்!
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இத்தனூண்டு டவுசர் காலத்துல எப்படி இருந்திருப்பார்?
ஏரியாவிலேயே எது பெரிய சைஸ் ஸ்கூல் எனப் பார்த்துப் பார்த்து செலக்ட் செய்து சேர்ந்திருப்பார்.
வருடத்துக்கு ஒருமுறை பொங்கலுக்கு பெயின்ட் அடிக்கும் செலவைத் தானே ஏற்றிருப்பார். பள்ளி ஆண்டு விழாக்களிலும் விதவிதமான பெயின்ட்களை உடலெங்கும் வரைந்துகொண்டு, போட்டிகளில் பங்கேற்றிருப்பார்.
பாண்டியன், சந்திரன், தமிழ்ச்செல்வன் என 'ன்'னில் முடியும் பெயர்களை உடைய நண்பர்களுடன் 'நண்பேன்டா’ என்று கை கோர்த்திருப்பார்.
இவரின் நண்பர்களெல்லாம் கபடி, கிரிக்கெட் என விளையாடிக்கொண்டிருக்கையில் இவர் மட்டும் புதுப் புது வீடியோகேம்ஸ் ஆடுவது, கம்யூட்டரைக் குப்புறப் போட்டு பிரித்து மேய்ந்து ஆராய்வது என்று பொழுதைக் கழித்திருப்பார்.
தன் செட்டுப் பசங்கள் எல்லாம் பொம்மை கார் வைத்து விளையாடும்போது, நிஜமான கார் வேண்டும், அதையும் உடைத்து, எரித்துத்தான் விளையாட வேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் வெளு வாங்கியிருப்பார்.
ஸ்கூல் காம்பெடிஷனில் எப்போதும் ராஜா வேடமே போடும் நம்ம குட்டி ஷங்கர் அதில் போடும் நகைகளைக்கூட ஒரிஜினல் கோல்டில் போட்டு அசத்தியிருப்பார்.
ஒவ்வொரு வீக் எண்டிலும் தன் ஃப்ரெண்டுகளையும் அவர்களின் பேரன்ட்ஸ்களையும் வீட்டுக்கு அழைத்து, விருந்து வைத்து 'பழகோ பழகென’ப் பழகியிருப்பார்.
சின்ன வயதிலிருந்தே மாடர்ன் பாயாக வளர்ந்து விட்டாலும் 'அங்கவை, சங்கவை’ 'தமிழ்ச்செல்வி’ வகையறா கேர்ள்ஸ்கூடவே அதிகம் நட்பு வைத்திருப்பார்.
'கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு’ என ஸ்கூலே லோக்கல் டூர் செல்ல ப்ளான் செய்தால், இதெல்லாம் போரிங் சார் நாம ஃபாரின் ட்ரிப் போகலாம் சார் என அடம்பிடித்திருப்பார்.
கிளாஸ் லீடர் தேர்தலில் நிற்பதோடு, 'இப்படி ஒரு ஆளைத்தான் எதிர்பார்த்துட்டிருந்தோம்’ என்று மக்கள் கருத்து சொல்லி தனக்கு கேன்வாஸ் செய்வதற்கென்றே சில மாணவர்களைக் கைவசம் வைத்திருப்பார்.
'ஈஸியான கணக்கு. இதுகூட உங்களால் கரெக்ட்டா போட முடியாதா?’ எனப் பசங்களை டீச்சர் திட்டினால், 'ஒருநாள், ஒரே ஒருநாள் இந்த பெஞ்ச்ல வந்து உட்கார்ந்து பாருங்க மிஸ்... அப்போ புரியும் எங்க வேதனை’ என டைமிங்காய் டயலாக் பேசி, பிரம்படி வாங்கியிருப்பார்!
No comments: