யாரை நம்புவது
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, சாலையில் வழிப்பறி என்று தினமும் செய்திகள் வெளிவருகின்றன. இவற்றை விட நூதன முறையில் மோசடி பற்றிய செய்திகள், இப்படி கூடவா ஏமாற்ற முடியும் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. அதில் ஒன்று வேலை வாங்கி தருகிறேன் என்று ஏமாற்றுவது. Ôஎனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும்Õ என்று பந்தா காட்டி திரியும் ஆசாமிகள், வேலை வாங்கி தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சுருட்டுகின்றனர். தனிப்பட்ட முறையில் வேலைக்கு ஆசைப்பட்டு பணத்தை கொடுத்து ஏமாந்தால் பாதிப்பு குறைவு. அதேநேரத்தில் பலரிடமும் சொல்லி அவர்களிடம் பணம் வாங்கி கொடுத்தால் நிலைமை விபரீதமாகி விடுகிறது.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்த சுகுமாரன், ரயில்வே கேரேஜில் கார்ப்பென்டராக வேலை செய்தவர். சென்னையை சேர்ந்த ராஜமன்னாரும் பாத்திமா என்ற பெண்ணும் பல இடங்களில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி பலரிடம் பணம் வாங்கி இருவரிடமும் கொடுத்துள்ளார் சுகுமாரன். ஆனால், யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. பணம் கொடுத்தவர்கள், சுகுமாரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
அவமானம் தாங்க முடியாமல் மனைவி, 2 குழந்தைகளுடன் கடந்த 17ம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் ராஜமன்னார், பாத்திமா என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். இதில் ராஜமன்னார் சிக்கிவிட்டார். அந்த பெண்ணை தேடி வருகின்றனர். பலரிடமும் முன்னின்று பணம் வாங்கி கொடுத்ததால் சுகுமாரன் குடும்பமே சோகமான முடிவை தேடி கொண்டுள்ளது. இதற்கு காரணமான மோசடி ஆசாமிகளை எப்படி தண்டிப்பது. பொதுமக்கள் கையில் கிடைத்தால் அடித்து உதைக்கிறார்கள். போலீசார் வந்து மீட்டு செல்கிறார்கள். அல்லது அவர்களாகவே சரண் அடைந்து பிறகு ஜாமீனில் வெளிவந்து விடுகின்றனர்.
சிட்பண்ட் மோசடி, தீபாவளி பண்ட் மோசடி போல, இப்போது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றும் வேலையில் பலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு கடும் தண்டனை கிடைத்தால்தான் மற்றவர்களுக்கு ஓரளவுக்காவது பயம் வரும்.
ஏமாற்று பேர்வழிகள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி எத்தனை செய்திகள் வந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வுதான் வரவில்லை. Ôஇவர் அப்படிப்பட்டவர் அல்ல.. எனக்கு 30 வருஷமாக தெரியும், நல்ல குடும்பம், வசதியானவர்.. சொன்னால் சொன்னபடி செய்வார்Õ என்று யாருக்காகவும் சர்ட்டிபிகேட் கொடுத்து பணம் வசூலித்து கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
No comments: