கள்ளத்தொடர்பில் பிரசவித்த குழந்தைக்கு 5 ஆண்டுகளாக பிரிந்திருந்த கணவரை தந்தையாக்கிய இந்தியப் பெண் கைது
துபாயில் வசித்து வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவருக்கு வேறொரு வளைகுடா நாட்டில் வேலை கிடைத்ததால், துபாயில் நர்ஸாக பணியாற்றிவந்த தனது 40 வயது மனைவியையும் ஒரே மகனையும் அங்கேயே விட்டுவிட்டு கடந்த 2006-ம் ஆண்டு அவர் புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையில், கருத்து வேற்றுமை காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி 2007-ம் ஆண்டில் அவரது மனைவி தொடுத்த வழக்கு இந்திய நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.
2006-ம் ஆண்டில் இருந்து மாறி,மாறி பல்வேறு வெளிநாடுகளில் வேலை செய்துவந்த நிலையில் துபாய் பக்கமே அவர் திரும்பவில்லை.
இந்நிலையில், கடந்த 22-04-2010 அன்று துபாய் ஆஸ்பத்திரியில் ஒரு குழந்தையை பிரசவித்த அவரது மனைவி, அந்த குழந்தைக்கு தன்னை தந்தையாக அந்தப் பெண் பதிவு செய்து, பிறப்புச் சான்றிதழ், துபாய் குடியுரிமை, சமூக பாதுகாப்பு அட்டை ஆகியவற்றை பெற்றிருப்பதாக நண்பர்களின் மூலம் அறிந்த அந்த நபர் திகைத்துப் போனார்.
இந்த மோசடி தொடர்பாக, துபாய் போலீசில் அவர் புகார் அளித்தார்.
அந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆஸ்பத்திரியில் நர்ஸாக பணியாற்றிவரும் அவர், கணவன் தன்னை விட்டு பிரிந்து சென்ற பிறகு, அதே ஆஸ்பத்திரியில் அறிமுகமான 48 வயது நபருடன் கள்ளத்தொடர்பு கொண்டு, அவர் மூலம் கருத்தரித்த குழந்தையை பிரசவித்து, அந்தக் குழந்தைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைப்பதற்காக விவாகரத்து வழக்கை சந்தித்து வரும் கணவரை குழந்தைக்கு தந்தை என்று போலியாக பதிவு செய்து துபாய் அரசை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்தப் பெண் மீது அரசை மோசடி செய்து பிறப்புச் சான்றிதழ், குடியுரிமை மற்றும் சமூக பாதுகாப்பு அட்டை ஆகியவற்றை பெற்றது, அன்னிய ஆணுடன் சட்டவிரோதமாக குடும்பம் நடத்தியது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை இம்மாதம் 23-ம் தேதி துபாய் கோர்ட்டில் நடைபெறவுள்ளது.

No comments: