Header Ads

திருப்புமுனை தீர்ப்பு: ஜெயலலிதா பதவியை பறித்த புதிய சட்டம்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா உடனடியாக முதல்வர் பதவியை இழந்து ஜெயிலுக்கு சென்றுள்ளார். இதற்கு காரணம் கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புதான்.

ஜெயலலிதா வழக்கிலும் அந்த தீர்ப்புதான் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாராவது குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு தண்டனை பெற்றால் உடனடியாக பதவியை இழப்பது பற்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8–வது பிரிவில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டப்பிரிவின்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்சினையால் திவால் ஆனவர்கள், தேசிய கொடியை அவமதித்தவர்கள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள், தீவிரவாத செயல்களில் தொடர்பு, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மத வேற்றுமையை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்துவது, போதை பொருள் கடத்தல் குற்றங்கள், தேர்தலின்போது வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், வாக்குச்சீட்டுகளை அள்ளி செல்லுதல் போன்ற குற்றங்கள், ஊழல், முறைகேடு போன்ற குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, சட்டமன்ற உறுப்பினர்களாகவோ பதவியில் தொடர முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8–ல் அடங்கி உள்ள (1), (2), (3) ஆகிய உட்பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் தகுதியை இழந்து விடுவார்கள். தண்டனை முடிந்த பிறகும் அடுத்த 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பதும் இந்த சட்டப்பிரிவுகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனே பதவி இழக்காமல் அவர்களை பாதுகாக்கும் விதத்தில் அதே 8–வது பிரிவின் (4)–வது உட்பிரிவு அமைந்து இருந்தது.

இந்த பிரிவின்படி விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டதில் இருந்து அடுத்த 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இழக்க மாட்டார்கள் என்று அந்த உட்பிரிவு கூறியது.

இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற பல எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தங்கள் பதவிகளை அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8–ன் (4)வது உட்பிரிவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கே விரோதமானது என்று பல்வேறு அமைப்புகளும் கூறியது.

இதுதொடர்பாக லில்லி தாமஸ், எஸ்.என்.சுக்லா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 10.7.2013 அன்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது.

அதன்படி மக்கள் பிரதி நிதித்துவ சட்டம் 8–ன் உட் பிரிவு (4)–ஐ ரத்து செய்தது. இதுதான் பல அரசியல் தலைவர்கள் உள்ளே போக வழிவகை செய்துள்ளது.

இந்த சட்ட திருத்தத்தின் மூலம் முதல் முதலாக காங்கிரசை சேர்ந்த ரஷீத்மசூத் எம்.பி. பதவியை இழந்தார். அடுத்ததாக தி.மு.க.வை சேர்ந்த டி.எம்.செல்வகணபதி தனது எம்.பி. பதவியை இழந்தார்.

1995–96ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் செல்வகணபதி அமைச்சராக இருந்தபோது சுடுகாட்டு கொட்டகை அமைத்ததில் ஊழல் நடந்ததாக கூறப்பட்டது. சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து உடனடியாக அவர் பதவி இழந்தார்.

No comments:

Powered by Blogger.