ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை: தமிழக அரசின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இரண்டு மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்படி நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும், உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை யாரையும் விடுதலை செய்யக்கூடாது. இவர்களை விடுவிக்க அதிகாரம் இருந்தும் தமிழக அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை. எந்த அடிப்படையில் தமிழக அரசு இவர்களை விடுவிக்க முடிவெடுத்தது என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர். இவர்களை விடுதலை செய்வது குறித்து 2 நாட்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளனர்.
இதனால், ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலையாவதில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.
No comments: