போலீஸ் அதிகாரி வருண்குமாரை கைது செய்ய வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் இளம் பெண் மீண்டும் புகார்
சென்ளை வளசரவாக்கத்தை சேர்ந்த இளம் பெண் பிரியதர்ஷினி. கடந்த 2011–ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் கைது செய்யப்பட வில்லை.
இதையடுத்து சென்னை எழும்பூரில் செயல்பட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பலமுறை நேரில் வந்து முறையிட்டார். இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு பிரியதர்ஷினி, மகளிர் அமைப்பினருடன் மீண்டும் வந்தார்.
அவருடன் ஜனநாயக மாதர் சங்க செயலாளர் வனஜா மற்றும் மகளிர் சட்ட உதவி மையத்தை சேர்ந்த மனோண்மணி ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது பிரியதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:–
கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எஸ். அதிகாரி வருண் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடி வருகிறேன். கடந்த பிப்ரவரி 14–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. அவரது பெற்றோருக்கு மட்டும் ஜாமீன் கிடைத்தது.
இதன் பிறகு ஒரு வாரம் ஆகியும் அவர் போலீசில் சரண் அடையவில்லை. போலீசாரும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை.
எனவே நான் வேறு வழியின்றி மகளிர் அமைப்பு உதவியை நாடி இருக்கிறேன். அவரை கைது செய்யும் வரை நான் ஓயப்போவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் சங்க நிர்வாகி வனஜா கூறும் போது, வருண்குமாரை போன்ற போலீஸ் அதிகாரிகள் காவல் துறையில் இருந்தால் பெண்கள் பிரச்சினை எப்படி தீர்க்கப்படும்
பிரியதர்ஷினிக்கு ஆதரவாக களம் இறங்கி நிற்கும் நாங்கள் உடனடியாக வருண்குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்றார்.
ஐ.பி.எஸ். பயிற்சி முடித்த வருண்குமார் சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். தற்போது அவர் அருப்புக்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
No comments: