ஜெயலலிதா அவசர நடவடிக்கையில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன
புதுடெல்லி : ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, தமிழக அரசு எடுத்த முடிவின் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையை, ஆயுள் சிறை தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, பல ஆண்டுக்காலம் சிறையில் இருந்துவிட்டதால், இவர்கள் 3 பேரையும் விடுவிக்க முடிவு செய்து, மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பி வைத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தனர்.இந்நிலையில், தமிழக அரசின் முடிவு குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜிவ் சுக்லா: நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் ராஜிவ் சுக்லா கூறுகையில், ‘‘தமிழக அரசின் நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் காரணங்கள்தான் காணப்படுகின்றன. இது சரியானது அல்ல. இந்த விஷயத்தில், கொலையாளிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை வரவேற்கிறோம்’’ என்றார்.ஆனந்த் சர்மா: மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், ‘‘தூக்கு தண்டனையை குறைத்ததால் மட்டும், சம்பந்தப்பட்டவர்கள் அப்பாவிகள் ஆகிவிட மாட்டார்கள். படுகோரமான ராஜிவ் காந்தி மரணத்தை மறக்க முடியாது. தமிழக முதல்வர் முந்தைய காலங்களில் எல்டிடிஇ மற்றும் தீவிரவாதம் தொடர்பாக என்ன நிலை கொண்டிருந்தார் என்பதும், இப்போது என்ன நிலை எடுத்துள்ளார் என்பது குறித்தும் விளக்க வேண்டும்’’ என்றார்.
மணிசங்கர் அய்யர்: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் கூறுகையில், ‘‘தன்னுடைய நடவடிக்கையின் மூலம் தேர்தலில் பலனடையலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால், தன்னுடைய நடவடிக்கையின் மூலம் பிரதமர் பதவிக்கு வரக்கூடிய தகுதி அவருக்கு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது’’ என்றார்.சஞ்சய் ரவத்: சிவசேனா தலைவர் சஞ்சய் ரவத் கூறுகையில், ‘‘ராஜிவ் காந்தி, ராகுல் காந்தியின் தந்தை மட்டுமல்ல. அவர் முன்னாள் பிரதமர். இதுபோன்ற வழக்குகளில், அக்கறையின்றி செயல்படுதல் கூடாது’’ என்றார்.ராம்கிர்பால் யாதவ்: ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் ராம்கிர்பால் யாதவ் கூறுகையில், ‘‘சாதாரண கொலையாளிகளையே சிறையில் இருந்து விடுவிக்கக்கூடாது. ஆனால், முன்னாள் பிரதமர் ஒருவரையே கொன்றவர்களுக்கு சலுகை அளிக்கப்படுவது வருத்தமான விஷயம்’’ என்றார்.ராம்கோபால் யாதவ்: சமாஜ்வாடி கட்சித் தலைவர் ராம்கோபால் யாதவ் கூறுகையில், ‘‘ஆயிரக்கணக்கான ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ளனர். அவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், கொடூர கொலையாளிகளைப்பற்றி தமிழக அரசு கவலைப்படுவது ஏன் என்று தெரியவில்லை’’ என்றார்.
No comments: