ஒவ்வொரு பிரச்சினையிலும் இருவேறு கருத்து இருப்பதால் தமிழக அரசு பின்னடைவை சந்திக்கிறது: விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு அள்ளித்தெளித்த அவசர கோலத்தில் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற காரணத்தால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழக அரசு பொதுப்பணித்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொள்ளாமலும், மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து செயல்படாததால்தான் உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசால் என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளுக்கு நான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை எதிர்த்து தடை ஆணை கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. அங்கு சில கருத்துகளை உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராக தெரிவித்தவுடன், அந்த மனுவையே அரசு திரும்பப்பெற்றது. ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் முதல்வரை அவதூறாக பேசியதாக சொல்லி, உளுந்தூர்பேட்டை மற்றும் போடியிலும் அ.தி.மு.க. வக்கீல்கள் தே.மு.தி.க.வினர் மீது வழக்கு தொடுத்தார்கள்.
இரண்டு நீதிமன்றங்களும் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தன. தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலே இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு சொன்னவுடன், ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு மீனவர்கள் விடுதலைக்கு தாங்கள்தான் காரணம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள்.
மீண்டும் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டபோது, இரண்டு பேருமே அதற்கு பொறுப்பேற்கவில்லை. வரப்போகின்ற பாராளுமன்ற தேர்தலை மனதிலே கொண்டு, ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பதைப்போல, ஒவ்வொரு பிரச்சினையிலும் இரு வேறான கருத்துகளை கொண்டிருப்பதால்தான் நீதிமன்றத்தில் இப்படிப்பட்ட பின்னடைவுகளை தொடர்ந்து தமிழக அரசு பெற்று வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments: