பெற்ற குழந்தைகளை ரயிலில் தவிக்கவிட்டு ஓடிய தாய்: 10 நாட்களில் குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்த தந்தை
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திலுள்ள மிர்சாபூரில் வசித்து வருபவர் நந்த்கிஷோர் விஸ்வகர்மா. இவரது மனைவி கீதா தேவி தனது கள்ளக்காதலனான ராகுல் ராஜோடு வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டார். தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கங்கா சாகர் விரைவு ரயிலில் சென்ற அவர் தனது 3 பெண் குழந்தைகளையும் பரௌனி சந்திப்பு ரயில் நிலையத்தில் நிர்க்கதியாக விட்டு விட்டு ஓடிவிட்டார்.
ரெயில் நிலையத்தில் 3 குழந்தைகளும் அழுதுகொண்டு நின்றிருந்ததை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு பாட்னாவிலுள்ள பிரயாஸ் பாரதி அறக்கட்டளையில் சேர்த்தனர்.
இந்நிலையில் தனது குழந்தைகளை தேடி பத்து நாட்களாக அலைந்து திரிந்த அவர்களது தந்தையான கிஷோர் அவர்களை அறக்கட்டளையில் கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்தார். அறக்கட்டளை அதிகாரிகள் அவர் தான் குழந்தைகளின் தந்தை என்பதற்கு ஆதாரங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.
அப்போது அறக்கட்டளை நிர்வாகிகளிடம் பேசிய அவர் தனது மனைவி 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் குழந்தைகளை கவனித்து கொள்ள ஆட்கள் யாரும் இல்லாததால் அவர்களை அறக்கட்டளையிலேயே விட்டு செல்ல அவர் முடிவு செய்துள்ளார். எனினும் தந்தையும், குழந்தைகளும் மகிழ்ச்சியாக கொஞ்சிக்கொண்டிருந்தது காண்பவர் கண்களை கண்ணீரால் நிரப்பியது.

No comments: