தேவயானியை மீண்டும் கைது செய்வோம்: அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்தவர் தேவயானி கோபர்கடே. இவர் மீது விசா மோசடி மற்றும் பணிப்பெண் சம்பள மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அமெரிக்க போலீசார் கடந்த டிசம்பர் மாதம் 12–ந்தேதி கைது செய்தனர்.
ஜாமீனில் விடுதலையான அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை பாதுகாக்க இந்திய அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையே தேவயானியை துணைத் தூதர் பெறுப்பில் இருந்து நீக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்து விட்டது. இதனால் தேவயானியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டது.
இதையடுத்து அமெரிக்காவில் இருந்து இந்தியா புறப்பட்ட தேவயானி நேற்று இரவு 11 மணி அளவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
விமான நிலையத்தில் அவரை தந்தை கோபர்கடே மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். டெல்லியில் அவர் மராட்டிய பவன் இல்லத்தில் தங்கினார்.
நாடு திரும்பிய தேவயானிக்கு டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் புதிய பணியை ஏற்க உள்ளார். தேவயானி டெல்லி திரும்பினாலும் அவரது குழந்தைகள் அமெரிக்காவில் படிப்பதால் அவர்களும் குடும்பத்தினரும் தொடர்ந்து நியூயார்க்கில் தங்கியுள்ளனர்.
அவர் டெல்லி புறப்படும் முன் கடைசி நடவடிக்கையாக மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டது.
டெல்லி திரும்பிய தேவயானி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறும் போது, ‘எனக்காக குரல் கொடுத்து ஆதரவு அளித்த மத்திய அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்’ என்றார்.
தேவயானி துணை தூதர் அந்தஸ்தில் தொடர்ந்து இருப்பதால் அவருக்கான சட்ட பாதுகாப்பு அமலில் உள்ளது. இதனால் அவர் வழக்கு விசாரணையை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. இதனால் அவரால் இந்தியாவுக்கு திரும்பி வர முடிந்துள்ளது.
தேவயானி விவகாரத்தில் பதில் நடவடிக்கையாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தேவயானி நீண்ட நாள் விதிவிலக்கில் இருக்க முடியாது. அவரை மீண்டும் கைது செய்வோம் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியதாவது:–
தேவயானி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால் இனி அவருக்கு தூதரக முறையிலான சட்டப்பாது காப்பு இல்லை. அமெரிக்காவில் இருந்து அவர் புறப்படும் முன்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி வழங்கப்பட மாட்டாது. இந்த தகவலை அவருக்கும் இந்திய அரசுக்கும் தெரியப்படுத்தி விட்டோம்.
தேவயானியின் பெயர் இனிமேல் அமெரிக்க விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகளில் தேடப்படும் நபரின் பட்டியலில் இடம் பெறும். எனவே அவர் நீண்ட நாட்களுக்கு தூதருக்கான விதிவிலக்கை அனுபவிக்க முடியாது. அவரை மீண்டும் கைது செய்வதற்கான வாரண்டு பிறப்பிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments: