Header Ads

பிரபல தெலுங்கு நடிகர் உதய் கிரண் தற்கொலை!

புதுடெல்லி: பிரபல தெலுங்கு நடிகர் உதய் கிரண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திர மாநில சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படங்களில் முதன்முதலாக தோன்றி நடிக்க ஆரம்பித்த உதய் கிரண், 'சித்திரம்' என்ற தெலுங்கு படம் வழியாக ரசிகர்களிடம் பிரபலமானார்.

இந்த படத்தை தேஜா இயக்கியிருந்தார்.  மேலும் 'நுவ்வு நேனு' மற்றும் 'மனசந்தா நுவ்வே' உள்பட சில பிரபலமான படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியான 'ஜெய் ஸ்ரீராம்' படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார்.  அதனுடன், 3 தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.  தமிழில் "பொய்" என்ற படத்தின் வழியாக அவர் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அதன் பின்பு "வம்பு சண்டை" மற்றும் "பெண் சிங்கம்" ஆகிய தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். 
இந்நிலையில் நேற்று நள்ளிரவு உதய் கிரண், தனது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது அறையில் தூக்கில் தொங்கியதை பார்த்த அவரது மனைவி விஷிதா மற்றும் அருகிலுள்ள வீட்டினர் அவரை மீட்டு ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். ஆனால் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

1980 ஆம் வருடம் ஜனவரி 26ந் தேதி பிறந்த கிரண், அவரது நீண்ட நாள் நண்பரான விஷிதாவை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


 தனது அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தனியாக இருந்த உதய், எதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தார் என இதுவரை தெரியவில்லை.

தனிப்பட்ட பயணமாக மணிகொண்டா நகருக்கு சென்ற விஷிதா, நேற்றிரவு பலமுறை உதய்யின் செல்போனை தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்காததால், சந்தேகமடைந்து அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து பார்த்தபோது, அவர் தூக்கு போட்டுக்கொண்டது தெரியவந்தது.

அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Powered by Blogger.