சென்னை அரசு மருத்துவமனையில் கூலி தொழிலாளி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன் (வயது 33). கூலி தொழிலாளியான இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது மனைவியின் பெயர் காயத்திரி (29). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில், காயத்திரி 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். 3-வது மாதத்தில் டாக்டர்கள் அறிவுரையின் பேரில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் 4 கருக்கள் உருவாகியிருப்பது தெரியவந்தது. பிரசவ காலம் நெருங்கியதை தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு காயத்திரி, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற தொடங்கினார்.
அவரது வயிற்றில் உள்ள 4 குழந்தைகளும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை வெளியே எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு காயத்திரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த அறுவை சிகிச்சையில் 3 பெண், ஒரு ஆண் குழந்தை என 4 குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொரு குழந்தையும் தலா 1½ கிலோ எடைக்கு மேல் இருந்தது.
4 குழந்தைகளையும் இன்குபெட்டரில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். அதே நேரத்தில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை நடந்ததால், காயத்திரிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால், உடனடியாக அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் அரசு மருத்துவமனை முழுவதும் காட்டுத்தீ போல வேகமாக பரவியது. இதனால், அங்கு இருந்த பலர் குழந்தைகளை பார்க்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால், குழந்தையின் தந்தையை தவிர யாரும் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
இதுகுறித்து, மருத்துவமனையில் இருந்த பெண் இயக்குனரை சந்தித்து கேட்டபோது, ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு 4 குழந்தைகள் பிறந்ததை அவர் ஒப்புக்கொண்டாலும், யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும், அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை அழைத்து இந்த செய்தியை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது, மீறி கூறினால் உங்களுக்கு பிரச்சினையாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்குள்ள மற்றொரு டாக்டரிடம் கேட்டபோது, அனைத்து தகவலையும் தந்ததுடன், ‘‘தனியார் மருத்துவமனைகளில் இதுபோல் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்திருந்தாலும், அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பிறப்பது இதுவே முதல் முறையாகும். எனவே, இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களே இன்னும் ஓரிரு நாளில் பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் இதை வெளிப்படையாக அறிவிப்பார்கள்’’ என்றும் தெரிவித்தார்.
குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு, 4 குழந்தைகள் பிறக்கப்போவது முன்பே தெரிந்தாலும், என்ன குழந்தைகள் என்பது தெரியாமலேயே இருந்தது. ஆனால், தற்போது 3 குழந்தைகள் பெண்ணாக பிறந்திருப்பதால், கூலி தொழிலாளியான தந்தை சற்று அதிர்ச்சி அடைந்துள்ளார். எப்படி 4 குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கப்போகிறோம் என்ற கவலையும் அவரை இப்போதே ஆட்கொள்ள தொடங்கியுள்ளது.
No comments: