என்னிடம் சொத்து எதுவும் இல்லை : பிரபுதேவா சொல்கிறார் -
என்னிடம் பாதுகாத்து வைக்க சொத்து எதுவும் இல்லை என்றார் பிரபுதேவா. தமிழில் ‘போக்கிரி‘, ‘வில்லு‘ படங்களை இயக்கிய பிரபுதேவா தற்போது இந்தி படங்களை இயக்கி வருகிறார். மும்பையில் ஸ்ரீதேவி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார். சமீபத்தில் ஸ்ரீதேவியின் பங்களாவில் தீ பிடித்ததையடுத்து அந்த பங்களாவை காலி செய்துவிட்டு உறவினர் வீட்டில் தங்கினார்கள். இதையறிந்த பிரபுதேவா தான் வாடகைக்கு வசிக்கும் வீட்டை உடனடியாக காலி செய்து தருவதாகவும், அதில் தங்கிக்கொள்ளுங்கள் என்றும் ஸ்ரீதேவியிடம் தெரிவித்தார். அதன்படி வீட்டை காலி செய்துவிட்டு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார் பிரபுதேவா.
ஆனால் வீட்டை உடனடியாக காலி செய்து தரும்படி ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் பிரபுதேவாவை மிரட்டியதாக மும்பை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதுகுறித்து பிரபுதேவா கூறியதாவது: வீட்டை காலி செய்து தரும்படி யாரும் என்னை மிரட்டவில்லை. ஸ்ரீதேவியின் வீட்டில் வாடகைக்கு இருந்துவந்தேன். அவரது பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டதால் நானேதான் அவரிடம் நான் தங்கி இருக்கும் வீட்டை காலி செய்வதாக கூறினேன். சந்தோஷமாக அதை செய்து கொடுத்தேன். தற்போது வாடகைக்கு வேறுவீடு தேடி வருகிறேன். இதை ஏதோ தேசிய பிரச்னைபோல் பேசுகிறார்கள். இதையடுத்து மைசூருக்கு சென்று ஒரு வாரம் குழந்தைகளுடன் தங்கி இருந்தேன். இப்போது மும்பை திரும்பிவிட்டேன். நான் தங்குவதற்கு பெரிய வீடு தேவை இல்லை. சிறிதாக இருந்தாலே போதும். 5 வீடுகளை பார்த்திருக்கிறேன். அவற்றில் பிடித்ததை தேர்வு செய்வேன். அப்படியே வீடு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஓட்டலில் தங்கி இருப்பேன். என்னுடைய உடைகளை தவிர பாதுகாத்து வைப்பதற்காக சொத்து எதுவும் என்னிடம் இல்லை. -

No comments: