இராணுவ கேணல் உள்ளிட்ட 12 உத்தியோகத்தர்கள் கைது- கண்டியில் இரண்டு விமானப் படையினர் கைது - தங்கம் கடத்த முயன்ற இந்திய பிரஜை கைது
சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டிய இராணுவ கேணல் உள்ளிட்ட பன்னிரெண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹாஓய அரலகங்வில என்னும் இடத்தில் சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 28 மரங்கள் இராணுவ ட்ரக் வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட போது மஹாஓய பொலிஸார் குறித்த இராணுவ உத்தியோகத்தர்களை கைது செய்துள்ளனர்.
பொலனறுவை பிரதேச முகாம் ஒன்றிற்கு எடுத்துச் செல்வதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த இராணுவ உத்தியோகத்தர்கள் சட்டவிரோதமான முறையில் மர விற்பனையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கண்டியில் இரண்டு விமானப் படையினர் கைது
மதுபோதையில் கண்டி நகரில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படும் இரண்டு விமானப் படையினரை கண்டி தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதிகமாக மது அருந்தியிருந்த இந்த விமானப் படையினர் இருவரும் இரவு 8 மணியளவில் கண்டி வில்லியம் கொப்பல்லாவ மாவத்தையில் பயணித்த வாகனங்களை நிறுத்தி அதில் பயணித்தவர்களை எச்சரித்துள்ளனர்.
இது குறித்து கண்டி போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் விமானப் படையினரை கைது செய்துள்ளனர்.
கொழும்பு விமானப் படையின் கட்டுக்குருந்த முகாமில் சேவையாற்றி வரும் இந்த விமானப் படையினர் இருவரும், பேராதனை பல் மருத்துவப் பீடத்தில் பாடநெறி ஒன்றை கற்று வருபவர்கள் என தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட விமானப் படையினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
தங்கம் கடத்த முயன்ற இந்திய பிரஜை கைது
இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய பிரஜை 29 லட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்திச் செல்ல முயற்சித்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்க வளையல், தங்கச் சங்கிலி, செய்து முடிக்கப்படாத மற்றுமொரு தங்கச் சங்கிலி ஆகியன சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்த எடை 586 கிராம் எனவும் தங்கத்தின் மேல் வெள்ளி மூலாம் பூசப்பட்டிருந்தது என்றும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
49 வயதான சந்தேக நபர் இன்று முற்பகல் 9.30 அளவில் சென்னை செல்ல தயாராக இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments: