நடிகை அஞ்சலிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு
அங்காடி தெரு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி என்ற பாலதிரிபுர சுந்தரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திரைப்படங்களில் என்னுடைய திறமையான நடிப்பினால், ஏராளமான படவாய்ப்புகள் எனக்கு வந்தது. இதனால் ஆந்திராவில் இருந்து சென்னையில் உள்ள என்னுடைய சித்தி பாரதிதேவி வீட்டில் குடியேறினேன்.
என்னுடைய சினிமா வாய்ப்பு, நிதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தையும் என் சித்தி கவனித்துக் கொண்டார். இந்த நிலையில், சினிமா இயக்குனர் களஞ்சியம் என் சித்தி பாரதிதேவிக்கு நண்பரானார்.
இதையடுத்து என்னுடைய சினிமா தொழிலில் அவர் தலையிட தொடங்கினார். எனக்கு முன் பணமோ எதுவும் தராமல், அவரது படத்தில் நான் நடிப்பதாக அறிவித்து படபிடிப்பை தொடங்கினார். ஆனால் நிதி பற்றாக்குறையினால், படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்.
இதற்கிடையில் என்னுடை காசோலைகளை பயன்படுத்தி என் வங்கிக்கணக்கில் இருந்து ஏராளமான பணத்தை எடுக்க தொடங்கினார்கள். மேலும், இதுகுறித்து விளக்கம் கேட்டதும், என்னுடைய சித்தி பாரதிதேவி, அவர்களது மகன்கள் சத்தீஷ் சூரிபாபு, சந்திரபாரத் ஆகியோர் என்னை சிறை பிடித்து வீட்டில் அடைத்து வைத்து மிரட்ட தொடங்கினார்கள்.
மேலும், என்னை தத்து எடுத்தது போல், என் சித்தி பாரதிதேவி போலி ஆவணங்களையும் தயாரித்தார். இதனால், வேறு வழியில்லாமல், இவர்களது பிடியில் இருந்து தப்பித்து ஆந்திர மாநிலத்துக்கு சென்று என் பெற்றொருடன் வசித்து வருகிறேன்.
இந்த நிலையில், களஞ்சியம் குறித்து பத்திரிகைகளில் அவதூறாக நான் பேட்டி கொடுத்ததாக கூறி, என் மீது சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
என் காசோலையை பயன்படுத்தி என் வங்கியிருந்து பணத்தை எடுத்து மோசடி செய்தது குறித்து பாரதிதேவி உள்ளிட்டோர் மீது நான் போலீசில் மோசடி புகார் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக என்னை மிரட்டும் விதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதுபோல், களஞ்சியத்துக்கு எதிராக பத்திரிகைகளுக்கு நான் நேரடியாக பேட்டி எதுவும் அளிக்கவில்லை.
எனவே உள்நோக்கத்துடனும், என்னை மிரட்டி பணிய வைக்கவேண்டும் என்பதற்காகவும் என் மீது களஞ்சியம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "இந்த வழக்கில் எதிர்மனுதாரரான களஞ்சியம் சார்பில் வக்கீல் யாரும் ஆஜராகவில்லை. எனவே, சைதாப்பேட்டையில் மனுதாரர் அஞ்சலிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறேன்" என்று உத்தரவிட்டார்.
No comments: