Header Ads

கண்கலங்க வைக்கும் மூதாட்டியின் தாயன்பு....

நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் நான்கு நாள் காய்ச்சலில் விழுந்து விட்டாலே... ‘உனக்கு தெரிஞ்ச முதியோர் காப்பகம் ஏதாவது இருக்கா..?’ என சில பாசக்காரப் பிள்ளைகள், தங்களது நண்பர்களிடம் விசாரிக்க தொடங்கி விடுகின்றனர்.

நாம் கருவான போது நமது தாய் அடைந்த ஆனந்தமும், நம்மை பிரசவித்தபோது அவள் அடைந்த வேதனையும், இந்த பாசக்காரப் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், ’நமக்கு புகட்டிய ஒவ்வொரு துளி தாய்ப்பாலுக்கும் 10 லட்சம் வெள்ளை ரத்த அனுக்களை நமது அன்னை தியாகம் செய்திருக்கிறாள்’ என்பதை புரிந்து கொள்ளவும் சிலருக்கு புத்தி இருப்பதில்லை.

இதன் விளைவாகவே, வயோதிக நிலையை எட்டிய பெற்றோரை சிலர் பாரமாக கருதி, ‘எங்கே கழற்றி விடலாம்’, ‘எப்போ விலக்கி விடலாம்’ என்று நன்றி கெட்டத்தனமாக யோசிக்க தொடங்கி விடுகின்றனர்.

ஆனால், ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு கிளை பாரமா? கொடிக்கு காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?’ என்ற பழைய தமிழ் திரைப்பட பாடல் வரியைப் போல், பல அன்னையர்கள் எந்த நிலையிலும் தங்களது பிள்ளைகளை பாரமாகவே கருதுவதில்லை.

இதற்கு சமீபத்திய கண்கண்ட உதாரணமாக திகழ்கிறார், சீனாவை சேர்ந்த ’ஸ்ழாங்’ என்ற 98 வயது மூதாட்டி.

கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் வசிக்கும் இவரது 60 வயது மகன், கடந்த 40 ஆண்டுகளாக பக்கவாத நோயால் (பெரலைஸிஸ்) பாதிக்கப்பட்டு, படுத்தப் படுக்கையாக கிடக்கிறார். இத்தனை ஆண்டுகளாகவும் ‘தாயன்பு’ என்ற உன்னத மந்திரம் மட்டும் தான் அவரை வாழ வைத்து வருகிறது.

மகனுக்கு உணவு ஊட்டுவது, அவரது மல-ஜலத்தை துடைத்து சுத்தம் செய்வது என இந்த தள்ளாத வயதிலும் தாய்ப்பாசத்தின் புத்தகராதியாக திகழும் அந்த மூதாட்டியை ‘தாய்மையின் அடையாளம்’ என்று சீன மக்கள் போற்றிப் புகழ்கின்றனர்.

இவரைப்பற்றி கேள்விப்பட்ட சில சமூக ஆர்வலர்கள், தாங்களாகவே முன்வந்து, நிதி திரட்டி, 1 லட்சம் யுவான்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 13 லட்சம் ரூபாய்) அந்த குடும்பத்துக்கு அன்பளிப்பாக வழங்க சென்றனர். ஆனால், வறுமை நிலையில் வாழ்ந்துவந்த போதிலும், தனது சொந்த பணத்தில் வாழ்வதையே விரும்பும் தன்மானம் மிக்க அந்த சீன மூதாட்டி, பணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, நிதி வழங்க வந்தவர்களை ஆசீர்வதித்து, வழியனுப்பி வைத்தார்.


No comments:

Powered by Blogger.