போர்குற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு இலங்கை மீண்டும் எதிர்ப்பு
வாஷிங்டன்: போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு இலங்கை மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சேவின் செயலர் வீர துங்க சர்வதேச விசாரணையால் இலங்கையில் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்று கூறினார். பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற பிரச்சனை கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் அங்கெல்லாம் சர்வதேச விசாரணை நடத்தாதது ஏன் என்று வீர துங்க கேள்வி எழுப்பினார். சர்வதேச விசாரணை நடத்தினால் இலங்கையில் 1980 ஆண்டு முதல் நடந்தவை குறித்து விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். குறிப்பாக அமைதிப்படை வீரர்கள் செயல்பாடுகள் குறித்து விசாரித்தால் இரு நாடுகளின் நட்புறவு பாதிக்கப்படும் எனவும் வீர துங்க தெரிவித்தார்.
சர்வதேச விசாரணை என்பது பழைய காயங்களைத் தோண்டுவது போன்றது என்று கூறிய அவர் இலங்கை இராணுவத்தினரின் மன உறுதி குலையும் என்றும் தெரிவித்தார். இதனிடையே இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற புகாரில் சர்வதேச விசாரணை நடத்தக்கோரி மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரவுள்ளது. இதனைத் தடுப்பதற்காக ராஜபக்சே சார்பில் வீர துங்க அமெரிக்கா சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வடக்கு மாகாண அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் வீர துங்கவின் பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வடக்கு மாகாண அரசின் தீர்மானத்தை இலங்கை அரசு திட்டவட்டமாக நிராகரித்து இருப்பதையே இது காட்டுவதாக கருதப்படுகிறது.
No comments: