பார்க்காமலே காதல் வாலிபர் பேச்சை நம்பி சேலத்துக்கு ஓடி வந்த டெல்லி இளம்பெண்
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த கச்சராயனூரில் வசித்து வருபவர் பாபு (23). இவர் சமீபத்தில் போதையில் இருந்து விடுபட தொடர்பு கொள்ளுங்கள் என்ற விளம்பரத்தை டிவியில் பார்த்தார். அதில் டெல்லியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தின் டெலிபோன் எண் கொடுக்கப்பட்டிருந்தது. விளையாட்டாக அந்த எண்ணை பாபு தொடர்பு கொண்டார். எதிர்முனையில், டெல்லி போதை மறுவாழ்வு மையத்தில் பணியாற்றி வரும் அன்னு (21) என்ற இளம்பெண் பேசினார்.
அவரது குரலை கேட்டதும் பாபு ஆர்வமாக பேசத் தொடங்கினார். பின்னர் தினமும் இருவரும் டெலிபோனில் பேசத் தொடங்கினர். பார்க்காமலே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. நீ என் ஊருக்கு வந்தால் திருமணம் செய்து கொள்கிறேன்‘ என அன்னுவிடம் பாபு கூறியுள்ளார்.இந்நிலையில், பாபுவிடம் தகவல் தெரிவிக்காமல் டெல்லியில் இருந்து கிளம்பி மேச்சேரி வந்தார் அன்னு. பின்னர் கச்சராயனூர் வந்து பாபுவின் வீட்டை கண்டுபிடித்தார். இதுவரை டெலிபோனில் பேசிய பெண், திடீரென தனது வீட்டுக்கு வந்ததால் பாபு அதிர்ச்சியடைந்தார்.
பாபுவிடம் அன்னு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். நான் விளையாட்டாகத் தான் பேசினேன். அதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்து விட்டாயே என்று கூறிய பாபு, அன்னுவை திருமணம் செய்ய மறுத்தார். பாபுவின் பெற்றோர், அன்னுவை மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் டெல்லியில் உள்ள அன்னுவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அவரை அழைத்து செல்ல நாளை அவரது பெற்றோர் மேச்சேரி வருகின்றனர். இளம்பெண் அன்னுவை சேலத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
No comments: