பிரித்தானியாவில் 4 இலங்கையருக்கு சிறைத்தண்டனை
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அழைத்து வரும் ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த இலங்கையர் உட்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வர முயற்சிக்கும் நபர்களிடம் 4 ஆயிரத்து 500 பவுண்களை அறவிட்டு வாகனங்கள் மூலமாக அவர்களை பிரித்தானியாவுக்கு அழைத்து சென்று விடும் சட்டவிரோத செயலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்தது.
கைது செய்யப்பட்டவர்களில் 4 இலங்கையர்களும் ஒரு பிரித்தானிய பிரஜையும் அடங்குவதாக உள்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
வாகனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் அதிகளவான ஆட்கடத்தல் சம்பவங்கள், கெஹைஸ், டங்க்ரிக், டோவர் உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருவதை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக வரும் நபர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி வடஅமெரிக்காவுக்கு செல்வதாக உள்துறை அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக வந்துள்ளவர்கள் யார் என்பதை அறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
லூடன் பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான சுதர்ஷன் ஜெயகொடி என்பவரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள குழுவின் முக்கிய தலைவர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அழைத்து வந்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட இவருக்கு மெயிட்ஸ்டோன் கிறவுண் நீதிமன்றம் 5 வருடங்கள் மற்றும் 4 மாத சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
இதே குற்றச்சாட்டை எதிர்நோக்கிய கிரையோடன் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான கிருபாமணியன் விக்னராஜாவுக்கு மூன்று வருடங்கள் மற்றும் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
லண்டன் ஹேயஸ் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான கமலேஷன் கந்தையா, ஈஸ்ட் ஹாமை சேர்ந்த 41 வயதான ஜோன் ஆன்ஸ் சௌந்தரநாயகம் உவைஸ், லண்டன் நோர்த்ஹோல்ட் பிரதேசத்தை பிரித்தானிய பிரஜை 46 வயதான அமர்ஜித் முத்தார் ஆகியோருக்கும் இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எட்டு வாரங்கள் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் இவர்களுக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கந்தையா மற்றும் உவைஸ் ஆகியோருக்கு 5 வருட சிறைத் தண்டனையும் முத்தார் என்பவருக்கு 4 வருடங்கள் மற்றும் 8 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கென்ட் பொலிஸார், தேசிய குற்றவியல் முகவர் அமைப்பு, யூரோபோல், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் சுவிஸ் நாடுகளின் விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பிரித்தானிய உள்துறை அலுவலகம் நடத்திய விசாரணைகளின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
No comments: