விமர்சனம் நினைவில் நின்றவள்
நடிகர் : அஸ்வின் சேகர்நடிகை : கீர்த்தி சாவ்லாஇயக்குனர் : அகஸ்தியா பாரதிஇசை : டி.இமான்ஓளிப்பதிவு : என்.ரவி
நாயகி கீர்த்தி சாவ்லா தன் குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறார். போகும் வழியில் சுற்றுலா வழிகாட்டியை (கைடு) அழைத்துக் செல்லும்படி தகவல் வருகிறது. அதன்படி அவர்கள் செல்லும் வழியில் தகவல் சொன்ன அங்க அடையாளங்களுடன் அஸ்வின் சேகர் அங்கு இருக்கிறார்.
இவர்தான் கைடு என்று அவர்கள் அழைக்க, அவரும் அவர்கள் அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காமல் சென்று விடுகிறார். சுற்றுலாவில் அவர்களுடன் 3 நாட்கள் தங்கி இருக்கிறார். சுற்றுலாவில் அஸ்வின் பேசுவதும், பழகுவதும், அட்வைஸ் பண்ணுவதையும் பார்த்து கீர்த்தி சாவ்லாவுக்கு அவரை பிடித்து போகிறது. கடைசி நாளில் சுற்றுலாவில் இருந்து கிளம்பும்போது தன் காதலை அஸ்வினிடம் சொல்ல முயற்சி செய்கிறார். ஆனால் சொல்ல முடியாமல் போகிறது.
பிறகு சுற்றுலா முடிந்து அவரவர் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள். ஜெயிலரான தன் தந்தையிடம் கீர்த்தி சாவ்லா தன் காதலை சொல்லுகிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தன் மகள் காதலை அவர் ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு அஸ்வினை தேடி இருவரும் அலைகிறார்கள்.
இந்தத் தேடுதலில் அஸ்வின் உண்மையான கைடு இல்லை என்று தெரிந்து கொள்கிறார்கள். இதனால் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். பிறகு தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் ஒருநாள் கீர்த்தி சாவ்லாவின் தந்தை பணியாற்றும் ஜெயிலில் கொலை குற்றத்திற்காக அஸ்வினை போலீஸ்காரர்கள் அடித்து இழுத்து வந்து போடுகிறார்கள். இதை ஜெயிலர் தன் மகளிடம் சொல்கிறார். இதைக்கேட்டதும் கீர்த்தி சாவ்லா அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு அஸ்வினிடம் எப்படி இங்கு வந்தாய்? எப்படி உன் மேல் கொலை குற்றம் வந்தது? அது உண்மையா? என்று கேட்கிறார். அதற்கு அஸ்வின், ‘நான் ஏற்கனவே திருமணம் ஆனவன். நானும் என் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். தற்போது மனைவி உயிரோடு இல்லை எனவும் கூறுகிறார்.
பிறகு தன் மனைவி எப்படி இறந்தார் பற்றியும், எப்படி ஜெயிலுக்கு வந்தேன் என்றும் கூறுகிறார். இறுதியில் அஸ்வின் ஜெயிலில் இருந்து வந்தாரா? கீர்த்தி சாவ்லாவுடன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் அஸ்வின் சேகர் நடனம் மற்றும் சண்டைகளில் பட்டையை கிளப்புகிறார். நடிக்கவும் முயற்சி செய்திருக்கிறார். நாயகியாக கீர்த்தி சாவ்லாவும், காயத்ரியும் கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார்கள்.
ரிஜிஸ்டராக வரும் எஸ்.வி.சேகர், ஆங்காங்கே காமெடியில் கலக்கி தன் நடிப்பு திறமையால் கதையை நகர்த்தி செல்கிறார். இயக்குனர் அமரர் அகஸ்திய பாரதி கருணைக் கொலையை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்த ரொம்பவும் முயற்சி செய்திருக்கிறார்.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சோனா, கீர்த்தி சாவ்லாவுடன் இணைந்து அஸ்வின் போடும் ரீமிக்ஸ் குத்துப்பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘நினைவில் நின்றவள்’ தடுமாற்றம்.
No comments: