பாதுகாப்பு வலையத்தில் இருந்த அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் அழித்தது: அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு
கொழும்பு, ஜன. 10-
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப்போரின்போது அப்பாவி தமிழர்கள் 40 ஆயிரம் பேர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போரின்போது பயந்த நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களின் குடும்பங்கள் இரனாபல்லை செயிண்ட் ஆண்டனிஸ் விளையாட்டு மைதானங்களில் ஒழிந்தனர்.
பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் இருந்த அப்பாவி தமிழர்களை அப்போது இலங்கை ராணுவம் குறிவைத்து குண்டுகளை வீசி அழித்தது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதற்கான போட்டோ ஆதாரத்துடன் அமெரிக்க தூதரக டுவிட்டர் வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த குற்றச்சாட்டை ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூர்யா மறுத்துள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஒழிந்த அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது என்பது ஆதாரமற்றது. இது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய மைதானம் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், உலக குற்ற நீதித்துறை அமைப்பின் அமெரிக்க தூதராக உள்ள ஸ்டீபன் ராப், யாழ்ப்பாணத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார். வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மூன்றாவது தீர்மானம் கொண்டுவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: